இலங்கை தொடரோடு முடித்துவைக்கப்படும் 4 சிரேஷ்ட வீரர்களது கிரிக்கெட் எதிர்காலம்…!
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் வரும் 25ம் திகதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணியில் இந்திய முக்கிய வீரர்கள் நால்வர் தமது கிரிக்கெட் வாழ்வை முடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, விக்கெட் காப்பாளர் விருத்திமான் சஹா, உதவி தலைவராக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் பெயர்கள் அணித்தேர்வில் பரிசீலிக்கப்படாது என இந்திய கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொடரில் தேர்வாளர்கள் சில புதிய வீரர்களை களமிறக்க விரும்புகிறார்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக BCCI உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
அணியில் இடம் இல்லை என்பது தேர்வாளர்களால் தனித்தனியாக நான்கு பேரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஞ்சி போட்டியில் அவர்களது செயல் திறனை பொறுத்து புஜாரா மற்றும் ரஹானேவுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் இஷாந்த் மற்றும் சஹா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று BCCI தகவல்கள் உறுதிபடுத்தி உள்ளன.
வயது மூப்பின் காரணமாக இஷாந்த் மற்றும் சஹா இருவரும் கவனத்தில் கொள்ளப்படாவிட்டாலும் ரஹானே, புஜாரா ஆகியோர் மறுவாழ்வு பெறலாம் எனவும் கருதப்படுகின்றது.