இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது, முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு மிக முக்கிய பொறுப்பை கையளிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக லசித் மாலிங்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரிற்கு தற்போது சென்றுள்ள லசித் மாலிங்க, அவ்வாறே இலங்கை அணியுடன் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் பெப்ரவரி மாதம் 11ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்கு மாத்திரமே, லசித் மாலிங்க ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஓய்வூ பெற்றார்.
லசித் மாலிங்க, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், 226 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 338 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
லசித் மாலிங்க, 84 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அந்த போட்டிகளில் 107 விக்கெட்களை தன்வசப்படுத்தியுள்ளார். (TrueCeylon)