இலங்கை வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப கோடிகளை கொட்டிய கிரிக்கெட் சபை- அதிர்ச்சிதரும் கணக்கறிக்கை..!
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பிற்காக 69 மில்லியன் ரூபாய் செலவில் விசேட விமானத்தின் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்தியப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, வீரர்கள் அனைவரும் மிகப் பெரும் செலவில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட போதிலும், ஒருசில வீரர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில், குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூவரும் கொவிட்-19 பாதுகாப்பு வலயத்தின் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வெளியே நடமாடியமை தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இதனையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை, குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்களின் இந்த மோசமான செயல்பாடு குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்தியப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,
“இங்கிலாந்தில் எமது வீரர்களுக்கு ஒருசில தளர்வுகள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தன. இதில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகாமையில் ஒரு கால்வாய் ஒன்று உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் காலை அல்லது மாலை வேளையில் அங்கு நடந்து செல்ல முடியும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியிருந்தது.
அதேபோல, அங்குள்ள பாலத்தின் ஊடாக நடந்து சென்றால் பிரதான நகரத்துக்குள் செல்ல முடியும். இதில் இலங்கை அணி வீரர்களுக்கு வெளியில் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அல்லது ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் உடற்கூற்று நிபுணர் ஒருவர் மாத்திரம் இருந்தார். வைத்தியர் ஒருவர் அணியில் இருக்கவில்லை. தற்போது 24 மணித்தியாலமும் அணியுடன் வைத்தியர் ஒருவர் இருப்பார். இதில் குறித்த சம்பவம் நடந்த போது இலங்கை அணியின் வைத்தியர் எங்கே இருந்தார் என ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு வைத்தியர் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டார்.
உண்மையில் அணியில் உள்ள வைத்தியரின் வேலை வீரர்கள் இரவு நேரத்தில் தூங்குவதைப் பார்ப்பது அல்ல. எனவே இவ்வாறான சூழ்நிலையில் வெளியே செல்ல முடியாது என்பதை வீரர்கள் நன்கு அறிவார்கள்.
அதேபோல, அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்க 69 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை கிரிக்கெட் சபை செலவிட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமானசேவையின் விசேட விமானத்தின் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தோம்.
அதுமாத்திரமின்றி, இந்திய வீரர்களுக்கு முன் நாங்கள் எமது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினோம். அதுதான் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. நான் ஒருபோதும் வீரர்களை விமர்சிக்க மாட்டேன். நான் எப்போதும் வீரர்களுடன் அன்பான இருப்பேன்” என அவர் தெரிவித்தார்.