இளையோர் உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி ..!

இளையோர் உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி ..!

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்று வந்த இளையோருக்கான 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய இளையோர் அணி வரலாறு படைத்துள்ளது.

இளையோர் உலக கிண்ண போட்டிகள் 1998ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரைக்கும் 13 உலகக்கிண்ண போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.

14 வது தடவையாக மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்று வந்த இந்த மாபெரும்  தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியினர் ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தனர், 61 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணிக்கு எட்டாவது விக்கட்டில்  ரூ மற்றும் சீல்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாக 93 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலமாக இந்திய அணிக்கு எதிராக ஒரு பலமான ஒரு ஓட்ட எண்ணிக்கையை நிர்ணயிக்கக் கூடியதாக இருந்தது.

இறுதியில் 189 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 190 எனும் இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதலாவது ஓவரிலேயே முதல் விக்கெட் பறிக்கப்பட்டது, ஹனூர் சிங் ,ஷாயிக் அகமத்  ஆகியோர் மிகச்சிறந்த 2-வது விக்கெட்டுக்காக இணைப்பாட்டம் புரிந்தனர், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் யாஷ் துல்  உதவி தலைவர் மற்றும் ஷாயிக் அகமத் ஆகியோரது இணைப்பாட்டம் அணிக்கு நம்பிக்கை கொடுத்தது.

97 ஓட்டங்களை பெற்ற நிலையில் அடுத்தடுத்து அணி தலைவர் மற்றும் உதவித்தலைவர் ஆகியோரது விக்கெட்டுகள் சரிக்கப்பட்டாலும், ராஜ் பாவா மற்றும் நிசாந்த் ஆகியோர் இங்கிலாந்துக்கு தலையிடியை கொடுத்தனர்.

முதல் 30 ஓவர்களில் 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்த இந்திய அணிக்கு இறுதி 20 ஓவர்களில் 90 ஓட்டங்கள் தேவையாக இருந்தது, இப்படியான நிலையில் இறுதி 10 ஓவர்களில் 44 ஓட்டங்கள் தேவை என்கின்ற நிலைமை வந்தது.

இறுதியில் இந்திய வீர்ர்களது பொறுப்பான துடுப்பாட்டம் இந்தியாவுக்கு இன்னுமொரு உலக்கிண்ணத்தை பரிசாக்கியது.

ஏற்கனவே இளையோர் உலகக்கிண்ண போட்டிகளில் நான்கு தடவைகள் உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு படைத்த இந்திய அணி இப்போது ஐந்தாவது தடவையாக வென்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவையான நிலையில் 48 வது ஓவரில் இந்திய விக்கெட் காப்பாளர் டினேஸ் பானா 2 சிக்சர்களை அடுத்தடுத்து விளாச 48.4 வது ஓவரில் 4 விக்கெட்டுக்கள் கையிருப்பில் இருக்கும் நிலையில் இந்தியா உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. நிஷாந்த் இறுதிவரை ஆட்டமிழக்காது பெறுமதியான அரைசதம் அடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்தியாவிடம் 5, அவுஸ்திரேலியாவிடம் மூன்றும், பாகிஸ்தானிடம் இரண்டும் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆகிய அணிகளிடம் ஒவ்வொரு இளையோர் உலக கிண்ணங்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.