இளையோர் உலக கிண்ணத்தில் பங்கேற்ற ஆப்கானியஸ்தர்கள் 4 வர் தலைமறைவு…!
வெஸ்ட் இண்டீசில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அரை இறுதிவரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி 4-வது இடத்தை பிடித்தது.
இந்த தொடர் முடிந்தபிறகு நான்கு பேர் ஆப்கானிஸ்தான் திரும்பாமல் இங்கிலாந்து வழியாக திரும்புகையில் காணாமல் போயுள்ளனர். இந்த நான்கு வீரர்களுக்கான டிரான்சிட் விசா 8-ந்தேதியுடன் முடிவடைந்தது.
நான்கு பேரும் இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டதாக தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் கிரக்கெட் போர்டு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. எனினும், நான்கு பேரும் சொந்த நாடு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் விதிமுறையில், டிரான்சிட் விசாக்காலம் முடிந்து 48 மணி நேரத்திற்குப்பின் தங்கியிருக்க முடியாது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்தபின், அந்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டிற்கு வெளியேறியுள்ளனர். இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள், முன்னாள் அதிபர் என பலர் அடங்குவார்கள்.
ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை அணியின் பயிற்சியாளராக இருந்த ரயீஸ் அகமதுஜாய், வீரர்கள் விரைவில் சொந்த நாடு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.