இஷாந்த் 300 -தம்மிக்க பிரசாத் ஓய்வு …! தவறு எங்கே இருக்கிறது ?

இஷாந்த் 300 -தம்மிக்க பிரசாத் ஓய்வு …!
தவறு எங்கே இருக்கிறது ?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் வியாழக்கிழமை தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுப்பதாக அறிவித்தார்.

37 வயதான பிரசாத், 2006 இல் பங்களாதேஷுக்கு எதிராக அறிமுகமானார் , 25 டெஸ்ட், 24 ஒருநாள் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார், சகல வகைப் போட்டிகளிலும் மொத்தம் 107 விக்கெட்டுகளைச் கைப்பற்றினார். தேசிய அணிக்காக அவர் கடைசியாக விளையாடியது 2015 இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்தமண்ணில் நடைபெற்றபோதாகும்.

பிரசாத் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை காயங்களால் பாதிக்கப்பட்டே கழித்தது துரதிர்ஷ்டவசமானது, இதிலே முக்கியமானது அவருக்கான தோள்பட்டை காயம் ஆகும்.

2015 ம் ஆண்டில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்க்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட போது இந்திய அணியின் பிரதான பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மாவும், இலங்கையின் பிரதான பந்து வீச்சாளராக தம்மிக்க பிரசாத்தும் காணப்பட்டனர்.

இப்போது இஷாந்த் சர்மா 300 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றி சாதித்து 100 வது டெஸ்ட்டில் விளையாடப்போகிறார், ஆனால் உபாதைகளால் அவதிப்பட்ட பிரசாத், தன் கிரிக்கெட் வாழ்வை முடித்துக்கொள்வதாக வேதனையோடு அறிவித்திருக்கிறார்.

தேசிய கிரிக்கெட்டில் அவரது மிகச்சிறந்த தருணம் 2014 இல் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் 5/50 ஆகும், இது இலங்கை அணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற உதவியது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஓய்வை அறிவித்தாலும் வரவிருக்கும் உள்நாட்டு பருவத்தில் SSC விளையாட்டுக் கழகத்திற்காக தனது பங்களிப்பை தொடர பிரசாத் விரும்புகிறார், மேலும் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் சாலை பாதுகாப்பு உலக T20 தொடரில் இலங்கை மூத்தோர் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

உபாதைகளால் அவதிப்படவில்லை என்றால் குறித்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் இஷாந்த் சர்மாவுக்கு ஈடாக நமது தம்மிக்க பிரசாத்தும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கியிருப்பார். காலம் மிக கொடூரமானது,

உபாதை ஒரு வீரரை எப்படி பின்னோக்கி பயணிக்க செய்தது என்பதற்கு தம்மிக்க பிரசாத் ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

#ThankYouDhammikka