உலகக் கிண்ணத்துகாக வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை- ரமீஷ் ராஜா அதிரடி ..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலககிண்ண போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹைடன் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் பிலான்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ரமீஷ் ராஜா அறிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ரமீஷ் ராஜா லாகூர் மைதானத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து இந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக பாகிஸ்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட மிஸ்பாஹ் உல் ஹக் அதேபோன்று பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் அண்மையில் உலக கிண்ண அணி அறிவிக்கப்பட்ட உடன் தங்கள் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர்.
இந்த நிலையில் நியூசிலாந்துடனான உள்ளூர் தொடருக்கு பாகிஸ்தான் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக சக்லைன் முஷ்டாக், பந்துவீச்சாளராக அப்துல் ரசாக் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையிலேயே அடுத்து வர உள்ள மிக முக்கியமான உலக்கிண்ண தொடருக்கு மத்தியூ ஹெய்டன், பிலான்டர் ஆகியோர் பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஷ் ராஜா நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.