உலகக் கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை – ஆட்டநாயகன் அலெக்ஸ் ஹேலஸ் உருக்கம்!

உலகக் கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை – ஆட்டநாயகன் அலெக்ஸ் ஹேலஸ் உருக்கம்!

பல கோடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை உடைக்கும் விதமான இரண்டாவது அரையிறுதி போட்டி எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது!

முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஏமாற்ற அதிர்ச்சிக்குள்ளாகி நின்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் இருவரும் பெரிய அணிகளுக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்டத்தை கொண்டு வராதது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது!

ஆனால் இன்னொரு முனையில் களத்திற்கு வந்த விராட் கோலி இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு எடுத்து வழக்கம்போல் விளையாட ஆரம்பித்தார். ஆனால் ஒரு சோகமாக இந்த தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்த சூரியகுமார் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்க களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா அதற்கான நியாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக செய்ய ஆரம்பித்தார். ஒரு முனையில் விராட் கோலி அரை சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். ஆனால் விராட் கோலி வெளியே சென்றதும் ஹர்திக் பாண்டியா சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பெடுத்துக் கொண்டு அதிரடியில் இறங்கினார். இறுதி வரை களத்தில் நின்ற அவர் 33 பந்துகளில் 63 ரன்களை விளாசி இந்திய அணியை 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்களுக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது!

ஆனால் இதற்குப் பிறகு இலக்கை விரட்ட வந்த இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை ஏதோ பள்ளி சிறுவர்களின் பந்துவீச்சை விளாசி தள்ளுவதைப் போல நொறுக்கி எடுத்தார்கள்.

 

இருவரும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று தலா 80, 86 ரன்கள் என குவித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்து இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றனர். நாலு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர் உடன் 86 ரன்கள் குவித்த அலெக்ஸ் ஹேலஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பேசும் பொழுது ” எனக்கு இது ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம். நான் விளையாடிய விதத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பேட்டிங் செய்ய உலகத்தில் மிகச்சிறந்த ஆடுகளத்தில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

இந்த மைதானத்தின் குறுகிய பக்கங்களில் ரன் சேர்ப்பது மதிப்பு வாய்ந்த ஒன்று. மேலும் இங்கு எனக்கு நல்ல நினைவுகள் இருக்கிறது. நான் மீண்டும் உலகக் கோப்பையில் விளையாடுவேன் என்று நினைக்கவே இல்லை. இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைப்பது எனக்கு சிறப்பான ஒரு உணர்வு. எதிர் முனையில் ஜாஸ் பட்லர் நம்ப முடியாதவராக சிறப்பாக இருந்தார் ” என்று மகிழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

இவர் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரராக இடம் பெற்று இருந்தவர். ஆனால் ஊக்க மருந்து சோதனையில் இவர் நிரூபிக்கப்பட்டதால் அந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டு அப்போதைய இங்கிலாந்து கேப்டன் மார்கனின் கோபத்திற்கு உள்ளாகி ஆட வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

✍️ Abdh