உலகின் எந்த பேட்ஸ்மேனும் செய்யாத ஐபிஎல் சாதனை.. 7000 ரன்கள் மற்றும் 300 சிக்ஸர்கள் அடித்த ரோஹித்!

உலகின் எந்த பேட்ஸ்மேனும் செய்யாத ஐபிஎல் சாதனை.. 7000 ரன்கள் மற்றும் 300 சிக்ஸர்கள் அடித்த ரோஹித்!

ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்த பந்துகளில் 7000 ரன்கள் அடித்த வீரர் என்ற இமாலய சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலியின் முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். அவர் 50 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்தது.

இந்த ஆட்டத்தின் போது ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அவர் 5,303 பந்துகளில் 7000 ரன்களை அடித்து இருக்கிறார். இதற்கு முன்பு விராட் கோலி 5,403 பந்துகளில் 7000 ரன்களை அடித்திருந்தார். இதன் மூலம் 100 பந்துகள் குறைவாக சந்தித்து 7000 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் ரோகித் சர்மா.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விராட் கோலி, ரோகித் சர்மா என இரண்டு வீரர்கள் மட்டுமே 7000 ரன்களைக் கடந்து இருக்கின்றனர். மேலும், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா சிக்ஸர்களில் மற்றொரு சாதனையும் செய்தார்.

இந்தப் போட்டியில் அவர் நான்கு சிக்ஸர்கள் அடித்திருந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா செய்திருக்கிறார்.

இதற்கு முன் கிறிஸ் கெயில் மட்டுமே ஐபிஎல் தொடரில் 300-க்கும் அதிகமான சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். இவை அனைத்தையும் கடந்து, ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் மற்றும் 300 சிக்ஸர்களை அடித்த ஒரே வீரர் என்ற புதிய உலக சாதனையையும் ரோகித் சர்மா படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநீதான்யா பேட்ஸ்மேன்.. தமிழக வீரர் சாய் சுதர்சனுக்காக எழுந்து நின்ற மைதானம்.. என்ன ஆட்டம்!
Next articleஐபிஎல் பைனலில் இப்படி ஒரு ராசியா.. ஆர்சிபி ஐபிஎல் கோப்பை ஜெயிக்கப் போவது உறுதி.. ரசிகர்கள் குஷி