உலக சாதனைகளுடன் நிறைவுக்கு வந்திருக்கும் இலங்கை-இந்திய தொடர்..!
இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் 19 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்தியா 3_0 என தொடரை வெற்றி கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் அணித்தலைவர் ஷானகவின் அதிரடி துடுப்பாட்டம் கைகொடுக்க 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஷானக அதிரடியாக 74 ஓட்டங்களை விளாசித் தள்ளினார் , பதிலுக்கு 147 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக மூன்றாவது அரைச் சதத்தை விளாச இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.
இதன் மூலம் இந்திய அணி தொடரை 3_0 என கைப்பற்றியதோடு தொடர் முழுவதும் மூன்று அரை சதங்கள் விளாசி 204 ஓட்டங்களைப் பெற்ற சிரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றைய போட்டி ரோகித் சர்மாவின் 125-வது டி20 போட்டியாக அமைந்தது, அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்ததோடு, இன்று இந்தியா பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்ச்சியான 12வது வெற்றியாக அமைந்தது.
உலக கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து 12 ஆட்டங்களில் வென்ற அணிகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா ஆகிய அணிகள் திகழ்கின்ற நிலையில் இப்போது இந்திய அணியும் அந்த சாதனை பட்டியலில் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது மாத்திரமல்லாமல் இந்த தொடரின் முதலாவது போட்டியில் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டுகளைப் பெற்றுக்கொண்டு வீரர் எனும் உலக சாதனையை மார்ட்டின் கப்டில் வசமிருந்து தனதாக்கி இருந்தவையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இத்தோடு சேர்த்து சொந்த மண்ணில் ரோகித் தலைமையில் இந்தியா 17 ஆட்டங்களில் வென்றிருக்கிறது, ஒரு அணி, ஒருவரது தலைமையில் சொந்த மண்ணில் அதிகம் வென்ற சாதனையும் இந்தியா வசமாகி இருக்கிறது.
இது மாத்திரமல்லாமல் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பெற்றுக்கொண்ட வெற்றி 17 வது டி20 வெற்றியாக அமைந்து இருக்கிறது.
ஒரு குறித்த அணிக்கு எதிராக ஒரு அணியின் அதிகபட்ச டி20 வெற்றி சாதனையும் இந்தியா வசம் ஆகியிருக்கிறது, முன்னர் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 16 வெற்றிகளை ஈட்டி இருந்தவையே முந்தைய சாதனையாகும் .
ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக சாதனைகள் புரியப்பட்ட முழுமை தொடர் ஒன்று இந்தியா வசம் ஆகி இருக்கிறது.