எதிரணிக்கு ரெட் அலர்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தியா- டெஸ்ட் சாம்பியன்ஷிப் கண்ணோட்டம் 1

ரெட் பால் கிரிக்கெட்டின், ரெட் ஹாட் கண்டிஷனில், எதிரணிக்கு ரெட் அலர்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியா. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, தரவரிசைப் பட்டியலில் முதலிடம், தற்போது, மெய்டன் உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பின் வாயிலில் நிற்பது என, மூச்சுத்திணற வெற்றி தாகத்தை, தணித்து வருகிறது. அத்தனை பெருமைக்கும், காரணமாய் இருப்பவர், மதம்பிடித்த ஒற்றை யானையாய், எல்லாத் திசைகளையும், வேட்டையாடித் தனதாக்கியவர் – விராட் கோலி.

ஏழாம் இடத்தில், தள்ளாடிக் கொண்டிருந்தபோது, சார்ஜ் எடுத்து, அணிக்குச், சார்ஜ் ஏற்றி, உச்சகட்ட வேகத்தில் ஓட வைத்திருக்கிறார், கோலி. கேப்டனாக விளையாடிய 60 போட்டிகளில், 36-ல் வென்று, மிரளவைக்கும், வின்னிங் பெர்சன்டேஜோடு, முந்தைய இந்தியக் கேப்டன்கள் சாதிக்கத் தவறியதைக் கூடச் செய்திருக்கிறார்.

இந்தியா, ‘ஸ்பின்னர்களின் ஹோம்’ என அழைக்கப்பட்டாலும், ஹோம் மற்றும் துணைக் கண்டங்களில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்தான், ஸ்பின் ஆயுதம் எடுபடும். ஓவர்சீஸ் கண்டிஷன்களில், ஸ்பின் பௌலிங்கை மட்டுமே கொண்டு காலம் கடத்துவது, கத்தியைக் கொண்டு, சுவற்றில் துளையிடுவது போன்றதுதான், பொருத்தமில்லா ஆயுதம்தான். இதையுணர்ந்து, சீர்திருத்தத்தை அங்கிருந்துதான் தொடங்கினார், கோலி. இஷாந்த், ஷமி, உமேஷ், தொடங்கி பும்ரா வரை, பௌலர்களின் கேப்டனாக, அவர்களைப் பார்த்துப் பார்த்து பயன்படுத்தி, மெருகேற்றிய கேப்டன் வேறு யாருமே இருக்க முடியாது. அதனால்தான், அவரது தலைமைக்குக்கீழ், வேகப்பந்து வீச்சாளர்களின், ஸ்ட்ரைக் ரேட், 51.7 ஆகவும், ஆவரேஜ், வெறும், 25.09 ஆகவும் மட்டுமே இருக்கிறது. 2018-க்கும் பிறகு, இவர்கள் நால்வரும் இணைந்து எடுத்துள்ள அளவு விக்கெட்டுகளை, எந்த நாட்டின் வேகப்பந்து வீச்சுப் படையும் எடுக்கவில்லை.

பந்து புதுசாக இருக்கும்போது, ஸ்விங்கை முன் வைத்துத் தாக்குவது , பந்து பழையதாகும்போது ரிவர்ஸ் ஸ்விங் ஆயுதத்தைக் கையில் எடுப்பது என, வேகப்பந்து வீச்சாளர்களை, சரியாகக் கையாண்டு ஆக்ரமிக்கத் தொடங்கியது, இவருக்குக் கீழ்தான். சிதறிக்கிடந்த சில்லுகளை எல்லாம் ஒன்று சேர்த்து, உருக் கொடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியாவுக்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறார் கோலி.
கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் வெளியேறிய போதும், இரண்டாம் கட்ட வீரர்களை வைத்தே, வெற்றியை இந்தியா தனதாக்கியது. ஆஸ்திரேலியாவில், அதுவும் சிராஜ்தான் சீனியர் என்ற நிலையில் விளையாடிய சமயத்தில்கூட இந்தியாவால், ஜெயம் கொள்ள முடியுமென்னுமளவு, இந்தியாவின் பெஞ்ச் பலத்தைக் கூட, அந்தளவு வலுப் பொருத்தியதாக்கியதுதான், கோலியின் வெற்றி மந்திரமே!

சரி உள்ளூர் கதையென்ன எனப் பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளில், எப்போதுமில்லாத அளவு, இந்தியா, இப்போதுதான், ஹோம் போட்டிகளில், அதிகப் போட்டிகளைக் கைப்பற்றி இருக்கிறது.
இந்தியாவில், கோலியின் தலைமையில், விளையாடிய 30 போட்டிகளில், 23-ல் இந்தியாவே வென்றிருக்கிறது.

போட்டிகளில்தானே வெற்றி, தொடர்களின் கதை என்ன எனக் கேட்டால், சொல்ல மறந்த அந்தக்கதையும், வெற்றிக் கதைதான். அவரது அதிரடி அணுகுமுறையால்தான், டெஸ்ட் தொடர்கள்கூட உயிரோட்டமுடையதாக மாறியது. அது வெற்றிப்பாதைக்கு இந்தியாவைத் திருப்பியது. கோலியின் கேப்டன்ஷிப்பில், விளையாடிய 20 தொடர்களில், 16-ல் வெற்றி பெற்றிருக்கிறது, இந்தியா.

ஒவ்வொரு ஓவராக, ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு இன்னிங்ஸாக, கட்டமைக்கப்பட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு, மனோதிடம், உடல்வலிமை, ஆட்ட நுணுக்கங்கள், மெகா திட்டமிடல், சமயோசித புத்தி என அத்தனையும் டன்கணக்கில் வேண்டும்.
அது அத்தனையும்தான், கோலியை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்திருக்கிறது.

தற்போது, இந்தியா முன்பு இருப்பது, ஒரே பிரம்மாண்டக் கனவு‌. மலையைப் புரட்ட வேண்டுமெனுவளவுக்கு பெரிய காரியம். அதுவும், இப்போட்டியை, சந்திக்கப் போகும் இருவருமே இரண்டு சிங்கங்கள், அடிபட்ட சிங்கங்கள்! முந்தைய தோல்வியை எல்லாம் முற்றிலுமாக மறக்கடிக்க, ஒரு பெரிய வெற்றி இருவருக்குமே, மிகமிக அவசியமாகிறது என்பதால் எல்லா வகைகளிலும், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

20 ஓவர், 50 ஓவர், 60 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருக்கும் ஒரே நாடான இந்தியா, முதல் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப்பையும் வென்று விடும் பட்சத்தில், ஒரு முழுமுதல் அணியாக, வலம் வரலாம். கோப்பைக் கனவை, கருப்பு வெள்ளையில் கண்டு கொண்டிருந்த கோலி, அதை வண்ணத்தோடு, நனவாக நடத்திக் காட்டலாம். வருடக்கணக்கில், அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம், மாற்றிக் கூடியதாக, அது இருக்கும்!

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஆக்ரோஷமான டெஸ்ட் கேப்டனின் கீழ் இந்தியா ஒரு அற்புத வெற்றியைப் பெறட்டும்!

#அய்யப்பன்