என்னடா வயசாகுது உனக்கு.. வெறும் 13 இன்னிங்ஸில் சாதித்த ரச்சின் ரவீந்திரா.. 5வது சதம் விளாசி சம்பவம்!

என்னடா வயசாகுது உனக்கு.. வெறும் 13 இன்னிங்ஸில் சாதித்த ரச்சின் ரவீந்திரா.. 5வது சதம் விளாசி சம்பவம்!

ஐசிசி தொடரில் குறைந்த இன்னிங்ஸில் 5 சதங்களை விளாசிய வீரர் என்ற ஷிகர் தவானின் சாதனையை நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலமாக ரச்சின் ரவீந்திரா இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் நியூசிலாந்து அணியின் வில் யங் – ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் வில் யங் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திரா – கேன் வில்லியம்சன் கூட்டணி இணைந்தது. ஒரு பக்கம் கேன் வில்லியம்சன் நிதானமாக ரன்களை சேர்க்க, மறுபக்கம் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக ரன்களை விளாசினார். தேவைக்கேற்ப ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியை விளாசி தள்ளினார். இதனால் 47 பந்துகளில் ரச்சின் ரவீந்திரா அரைசதம் கடந்தார்.

இதன்பின் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றிய ரச்சின் ரவீந்திரா தென்னாப்பிரிக்கா பவுலர்களை வெளுத்து கட்டினார். இதனால் 25 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 143 ரன்களை எட்டியது. தொடர்ந்து சதம் அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 93 பந்துகளில் தனது 5வது ஒருநாள் சதத்தை எட்டி அசத்தினார். இந்த 5 சதங்களுமே ஐசிசி தொடர்களில் அடிக்கப்பட்டவைதான்.

இதனால் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக ஐசிசி தொடர்களில் அதிவேகமாக 5 சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். இதற்கு முன்பாக 15 இன்னிங்ஸ்களில் ஷிகர் தவான் 5 சதங்களை விளாசியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 13 இன்னிங்ஸ்களிலேயே ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.

சிறப்பாக ஆடிய அவர் 101 பந்துகளில் ஒரு சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா 226 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். ஒருவேளை நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், ரச்சின் ரவீந்திராவுக்கு தங்க பேட் கிடைக்க வாய்ப்புகள் அமைந்துள்ளது.

Previous articleஇந்தியாவுக்கு அழுத்தம் தந்தோம்.. எங்களால் வீழ்த்த முடியும்.. நியூசிலாந்து கேப்டன் சாட்னர்
Next articleஇந்தியாவுக்கு மட்டும் தனி ரூல்ஸா.. ஜெய் ஷா செய்ததை ஏற்கவே முடியாது.. பொங்கிய பாகிஸ்தான் ரசிகர்கள்