என்னது Babarக்கு சரியா English பேச வராதாமா?

என்னது Babarக்கு சரியா English பேச வராதாமா?

நேற்றுதான் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபரின் பேட்டியை காணக் கிடைத்தது. ஆங்கிலம் சரியாக வராததால் ஹிந்தி / உருது மொழியில் பேசுகிறார்.

அதனை கிண்டல் செய்து சில பதிவுகளையும் காணக் கிடைத்தது.

இதே நேரம் இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட எல்லா வீரர்களுமே ஓரளவு சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்.
(ராணுவத்திலிருந்து அணியில் இடம்பிடித்தவர்கள் தவிர.)

ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அரசியல் உள்ளது.

மொழி என்பது ஒரு தொடர்பாடல் ஊடகமே. ஒரு கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க அல்லது தலைவனாக அத்துறையில் திறமை, ஆளுமையை வெளிக்காட்டினால் போதும். அந்த அடிப்படையில் அசாமை ஒரு சிறந்த தலைவராக கொள்ளலாம்.

ஆங்கிலம் என்பது அதன் அடுத்த கட்டமே.

மறுபக்கம் இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் அணித் தெரிவில் பாடசாலையின் வகீபரம் மிகவும் முக்கியமானது.

இலங்கையின் பிரபல பாடசாலைகள் ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரிகளின் Old Boys Cricket என ஒன்று நடக்கும். முன்னர் அது Eye Channel இலும் நேரடி ஒளிபரப்பு ஆகும்.

அதில் விளையாடும் வீரர்களை பார்த்தால் கிட்டத்தட்ட இலங்கை அணி முழுவதுமே இரண்டாகப் பிரிந்து விளையாடுவது தோன்றும்.

விரல்விட்டு எண்ணும் இந்த பிரபல பாடசாலைகள் தவிர்ந்து அணிக்குள் இடம் பிடிப்பவர்கள் ஒன்று அதீத திறமை அல்லது இராணுவத்திலிருந்து வந்திருப்பவர்களாக இருக்கும்.

மத அரசியலுக்கு அடுத்து இலங்கை கிரிக்கெட்டை அழிக்கும் இந்த பாடசாலை அரசியல் மிகவும் வேதனையானது.
Selection Committee இல் இருப்பவர்களும் தமது பாடசாலைக்கு முன்னுரிமை அளித்தல் என்று அது ஒரு விசச் சக்கரமாக தொடர்கிறது.

கிரிக்கெட் என்பது உதைப்பந்தாட்டம் போல் ஒரு பந்தை வைத்துக்கொண்டு வேண்டிய இடத்தில் விளையாட முடியாது.

கிராமப்புறங்களில் எத்தனையோ திறமையான கிரிக்கெட் வீரர்கள் வாழ்நாள் முழுவதும் Tennis பந்து விளையாடியே காலம் கழிந்து விடுகிறது.

கிரிக்கெட் விளையாட அதற்குரிய மைதானம், pitch அதற்கு Matting, கடின பந்து என எத்தனையோ செலவுகள் அதனை சாதாரண கிராமப்புறங்களில் அல்லது ஏழ்மையான பாடசாலைகளில் இருந்து வரும் மாணவர்களால் செய்ய முடியாது உள்ளது.

திறமையான மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் நுளைந்து அதன் மூலம் விளையாட்டுக்குள் புகுந்தால் மாத்திரமே இலங்கை அணியில் இடம் பிடிக்கும் ஒரு கடினமான Selection தான் இங்கு காணப்படுகிறது.

அது அந்த ஆங்கிலம் பேசும் விதத்தில் இருந்து வெளிப்படையாகிறது.

பிரபல பாடசாலையில் அனுமதி என்பது அது வேறு அரசியல். அது ஏழை , நடுத்தர மாணவர்களுக்கு எட்டாக்கனியே.

ஆனால் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பாடசாலை கூட செல்லாத Street Playersக்கும் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

இலங்கையில் LPL போன்ற உள்ளூர் போட்டிகளில் மாகாண அடிப்படையில் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் ஏற்கனவே அணியின் Top Selection List இல் உள்ளவர்களே விளையாடுகிறார்கள்.

எங்க ஊரில் பள்ளிப் பக்கமே வராதவர்களை எல்லாம் Trustee Board தலைவராக வைப்பார்கள். என்ன காரணம் என்று கேட்டால் அவருக்குத்தான் ஆங்கிலம் எழுத, பேச தெரியுமாம்.

நாம் ஆங்கிலத்தை மொழியாக அல்லாமல் அறிவாக கற்க முனைந்து Tense இல் இருந்து ஆரம்பித்து இடையிலேயே Tension ஆகிவிடுகிறோம்.

தமிழ் , சிங்கள மொழிகளை சாதாரணமாக பேசுவதன் மூலம் எவ்வாறு பழகுகிறோமோ அவ்வாறு ஆங்கிலத்தை பழகினால் மாத்திரமே (எந்த ஒரு மொழியையும்) இலகுவாக கற்றுக் கொள்ளலாம்.

✍️ Ziad Aia