“ஏன் ரெய்னாவை எடுக்கவில்லை?” – சிஎஸ்கே நிர்வாகத்தின் விளக்கமும், சுரேஷ் ரெய்னாவின் பதிலும்

“ஏன் ரெய்னாவை எடுக்கவில்லை?” – சிஎஸ்கே நிர்வாகத்தின் விளக்கமும், சுரேஷ் ரெய்னாவின் பதிலும்

“ரெய்னாவை எடுக்காதது எங்களுக்கும் கடினமாக இருந்தது, அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்…” – சிஇஒ காசி விஸ்வநாதன்.

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் நடைபெற்றது. அதில் சென்னை உட்பட எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை எடுக்கவில்லை. ஆரம்ப விலையாக ரூபாய் இரண்டு கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த அணியும் அவரை எடுக்க முன்வராததால் சுரேஷ் ரெய்னா ‘UNSOLD’ நிலைக்கு தள்ளப்பட்டார். சிஎஸ்கே கூட அவருக்காக ஏலம் கேட்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

சின்ன தல, Mr.IPL என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் சாதனைகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவரை ஏன் சிஎஸ்கே எடுக்கவில்லை என அதன் சிஇஒ காசி விஸ்வநாதன் காணொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“கடந்த 12 வருடங்களில் சீராக திறனை வெளிப்படுத்திய சிறந்த வீரர்களில் ரெய்னா ஒருவர். நிச்சயமாக, ரெய்னாவை எடுக்காதது எங்களுக்கும் கடினமாக இருந்தது. அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு டீமின் கம்போசிஷன் என்பது அதன் ஃபார்ம் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. அதுதான் அவர் இந்த டீமுக்கு பொருந்த மாட்டார் என நாங்கள் முடிவு எடுத்ததற்கு ஒருவித காரணம்” என்றார். மேலும், “நாங்கள் சுரேஷ் ரெய்னாவையும் பத்தாண்டுகளாக உடன் இருந்த ஃபாஃப் டு ப்ளெஸ்ஸியையும் மிஸ் செய்கிறோம். இதுதான் ஏலம் செயல்படும் முறை. இந்தத் தொடரில் சிஎஸ்கே சீரான பர்பார்மன்ஸ் தரும்” என்கிறார் காசி விஸ்வநாதன்.

டு ப்ளெஸ்ஸி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் நீங்கள் அரசியலில் சேர்வீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “எனக்கு கிரிக்கெட் மீது மட்டும்தான் காதல். நான் கிரிக்கெட் உடன் இருப்பேன். எனக்கு தெரிந்த விளையாட்டு இதுதான். எனக்கு அரசியல் புரியாது. நான் நல்ல செஃப் ஆக விரும்புகிறேன். தினமும் விதவிதமாக சமைக்கிறேன், ஊர் சுற்றுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இரண்டு மூன்று சீரிஸுக்குப் பிறகு இளம் கிரிக்கெட்டர்கள் தங்களை அழுத்தத்திற்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு பயிற்சியாளர், அணிக்கான நீண்ட கால நோக்கத்தைக் கொண்டிருப்பார். தேர்வு செய்பவர்கள், வீரர்களை நம்புவர்; 5-10 மேட்சுகள் வரை விளையாட கிடைக்கும். உங்களுக்குத் தெரியும், அணியின் கேப்டன் உங்களை வளர்த்து கொள்ள இரண்டு மூன்று டூர்களில் நேரம் தருவார். அது கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு” என்றார் ரெய்னா.

#Abdh