ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வந்தார் தோனி..டிசர்ட் டிசைனில் மறைந்திருக்கும் செய்தி என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருக்கிறார். ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் சென்னை அணி, தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. முதல் போட்டியிலே பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.
எப்போதுமே சிஎஸ்கே அணி போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பயிற்சி முகாமை வைத்து வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடும். அந்த வகையில் மும்முறை ருதுராஜ், தோனி உள்ளிட்ட ஸ்டார் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்திருக்கிறார்கள். தோனிக்கு தற்போது 43 வயது ஆகிறது. இதனால் அவருக்கு இதுதான் கடைசி தொடரா? இல்லை மேலும் ஒரு சீசன் விளையாடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தோனி தன்னுடைய டீசர்ட்டில் அதற்கான விடையை மறைமுகமாக தெரிவித்துவிட்டார் என ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அந்த டீசர்டில் உள்ள டிசைன் மோர்ஸ் கோட் எனப்படும் நுட்பமாகும். அதாவது மறைமுகமாக ஒரு செய்தியை உணர்த்த பயன்படுத்தப்படும் விதம் தான் மோர்ஸ்கோர்ட். அதில் தோனி தன்னுடைய டீசர்ட்டில் ஒன் லாஸ்ட் டைம் என்று செய்தியை மறைமுகமாக மோர்ஸ் கோடில் பொறித்திருப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் இதுதான் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பது தெளிவாகிறது. ஏற்கனவே தோனி தன் மீது பெரிய அளவு பணத்தை செலவிட வேண்டாம் என்பதற்காக வெறும் 4 கோடி ரூபாய் சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொண்டார். கடந்த முறை சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தையே பிடித்தது. இம்முறை தோனி சாம்பியன் பட்டத்துடன் செல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் களம் இறங்க உள்ளார். தோனி சென்னை வந்தது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகம் அடைய செய்திருக்கிறது.