ஐபிஎல் தொடருக்காக வங்கதேச தொடரை புறக்கணிக்கும் தெ.ஆ.வீரர்கள்!

ஐபிஎல் தொடருக்காக வங்கதேச தொடரை புறக்கணிக்கும் தெ.ஆ.வீரர்கள்!

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் விளையாடுவதற்கான வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து விலகவும் தயார் என தென் ஆப்பிரிக்க வீரர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது.

இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக விளங்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

இந்த வருடம் 10 அணிகள் பங்கு பெறுவதை அடுத்து 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இதில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள நிலையில் வரும் மே 29-ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் மாபெரும் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கி உள்ளன. குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக மற்ற அணிகளை காட்டிலும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் நடைபெறும் போதும் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் தங்கள் தேசத்திற்கு விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியை தவிர்க்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பங்கேற்று வருகிறது. அதே போல் பாகிஸ்தானில் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா பங்கேற்று வருகிறது.

எனவே ஐபிஎல் 2022 தொடரின் ஆரம்ப பகுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிய வருகிறது. இது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரின்போது தனது சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா விளையாடும் கிரிக்கெட் தொடர்களும் நடைபெற உள்ளது.

வரும் மார்ச் 18ஆஆம் தேதி துவங்கும் இந்த வங்கதேச சுற்றுப்பயணம் வரும் ஏப்ரல் 12ஆஆம் தேதி தான் நிறைவு பெறவுள்ளது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் ஒரு சில வாரங்களில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

ஆனால் பெரும்பாலான தென்ஆப்பிரிக்க வீரர்கள் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாக அதன்பின் மற்றொரு செய்தி உலா வந்தது. அதை உறுதிப்படுத்தும் வண்ணமாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் தொடரை தவிர்த்துவிட்டு நாட்டுக்காக விளையாட வேண்டும் என டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர் கூறியிருந்தார்.

மேலும் தென்ஆப்பிரிக்க நாட்டின் மீது அவர்கள் எந்த அளவுக்கு விஸ்வாசத்தை வைத்துள்ளார்கள் என்பதை இந்த விஷயத்தில் பார்க்கப் போகிறேன் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அல்லது ஐபிஎல் தொடர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றில் மட்டும் பங்கேற்பது பற்றி தென்ஆப்பிரிக்க வீரர்களிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அதில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பெரும்பாலான வீரர்கள் ஆதரவு தெரிவித்ததாக பிரபல இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடரின் முதல் வாரத்தில் இருந்தே ககிசோ ரபாடா போன்ற முக்கிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரியவருகிறது.

மேலும் பிசிசிஐக்கு நெருங்கிய நண்பனாக விளங்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்களது வீரர்களை ஐபிஎல் தொடரில் பங்கேற்க எந்தவித தடையும் செய்யமாட்டோம் என ஏற்கனவே வாக்குறுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது.

எனவே அதைக் காப்பாற்றும் வகையில் தென்ஆப்பிரிக்க வீரர்களின் இந்த முடிவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Abdh