ஐபிஎல் போட்டிகள் தேவைதானா என்று திடீர் கேள்வி எழுப்பும் கில்கிறிஸ்ட்

14வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஐபிஎல் போட்டிகள் இப்போதைய நிலையில் தேவைதானா என்று திடீர் கேள்வியை முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் சடுதியாக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும்  மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களை திசை திருப்புவதற்காக இந்த கட்டத்தில் போட்டிகள் இடம்பெறுகின்றன எனும் கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் டெக்கன் சார்ஜஸ் அணிக்காக விளையாடி கிண்ணம் வென்று கொடுத்த கில்கிறிஸ்ட் திடீரென இந்த கேள்வியை எழுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது மாத்திரமல்லாமல் தான் இந்திய மக்களுக்கு இந்த கட்டத்தில் பிரார்த்திப்பதாகவும் கில்கிறிஸ்ட் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்திய வீரர்கள், இந்திய அணியினர், இந்திய மக்களுடனும் அதிகமான அக்கறையையும் பாசத்தையும் எந்த நேரத்திலும் வெளிப்படுத்தி வருபவர் கில்கிறிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.