ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் நியமனம்
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, ஆகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
இந்நிலையில் பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாத இறுதிக்கு முன்பு ஏலத்தில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவரும் ஆலோசகராக கெளதம் கம்பீரும் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் விஜய் தாஹியாவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் ஆமதாபாத் தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், இஷான் கிஷன் ஆகிய வீரர்களை ஆமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆமதாபாத் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகவும் தெரிகிறது. இரு புதிய அணிகளும் ஜனவரி 15-க்குள் தேர்வு செய்த வீரர்களின் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.