ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் பயிற்சியாளர் விபரம்- நெஹ்ரா ..?

ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக நெஹ்ரா நியமனம்

ஐபிஎல் 14ஆவது சீசன் முடிந்த உடன், புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு 15ஆவது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த புதிய இரண்டு அணிகளுக்கான ஏலம் அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது.

அதில் சஞ்சீவ் கோயங்கா குழுமம் 7,090 கோடிக்கு லக்னோ அணியையும், சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் 5,625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இருக்கும் 8 ஐபிஎல் அணிகள், பிசிசிஐ விதிமுறைகளுக்கு உட்பட்டு நான்கு வீரர்கள் வரை தக்கவைத்து, அதனை அறிவித்தது. புதிதாக இணைந்துள்ள அகமதாபாத், லக்னோ அணிகள், ஜனவரி 20ஆம் தேதிக்குள் 2 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளி நாட்டு வீரரை தக்கவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய அணிகள், யார் யாரை தக்கவைப்பது என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், அகமதாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் செயல்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அகமதாபாத் அணிக்கு ஆஷிஸ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அணியின் இயக்குநராக இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் விக்ரம் சோலாங்கியும், ஆலோசகராக, 2011-ல் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வென்றுகொடுத்த பயிற்சியாளர் கோரி கிறிஸ்டனும் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அந்த அணி நிர்வாகம் உடனே அறிவிக்க முடியாது. பிசிசிஐயிடம் முறையான அனுமதி பெற்ற பிறகுதான் அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

#Abdh