ஐபிஎல் 2022 : பார்வையாளர்களுக்கு அனுமதி …!

ஐபிஎல் 2022 : 25% பார்வையாளர்களுக்கு அனுமதி.

இந்தியாவில் வரும் சனிக்கிழமை மார்ச் 26 ஆம் தேதி 15-வது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக துவங்கி உள்ளது. ஏற்கனவே இருந்த எட்டு அணிகளுடன் புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட இரு அணிகள் இணைந்துள்ளதால் மொத்தம் 10 அணிகளை கொண்டு 70 போட்டிகள் இந்த தொடர் முழுவதும் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு காத்திருக்கிறது என்றே கூறலாம்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் போட்டிகள் நடைபெற்ற வேளையில் இந்த ஆண்டு முழுவதுமாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு எந்த ஒரு பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக மும்பையை சுற்றி உள்ள குறிப்பிட்ட நான்கு மைதானங்களில் மட்டுமே இந்த லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் மும்பை வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம், டி ஒய் பாட்டில் மைதானம், புனேவில் உள்ள மைதானம் என இந்த நான்கு மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்று போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. கொரனோ பரவல் காரணமாக ஆரம்பத்தில் போட்டிகள் காலி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண வேண்டும் என தொடர் கோரிக்கைகளை எழுப்பி வந்ததால் பி.சி.சி.ஐ-யும் ஐபில் நிர்வாகமும் இணைந்து மகாராஷ்டிர அரசின் ஆலோசனைக்கு இணங்க தற்போது 25 சதவீத ரசிகர்களை மைதானத்தில் போட்டிகளை நேரில் காண அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் 25% ரசிகர்களாக 8277 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர். மொத்தம் 33108 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் போட்டியை கண்டுகளிக்க கூடிய வான்கடே மைதானத்தில் தற்போது 8277 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை நேரில் காண டிக்கெட்டுகளை மைதானத்தில் சென்றெல்லாம் எடுக்க முடியாது. அதற்கான தெளிவான விளக்கத்தை ஐபிஎல் நிர்வாகம் வழங்கியுள்ளது.

அதன்படி இன்று மார்ச் 23-ஆம் தேதி பகல் 12 மணி முதல் www.iplt20.com மற்றும் www.bookmyshow.com ஆகிய இணையதளங்களில் லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் மதிப்பு 800 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

#Abdh