ஐபிஎல் 2022: புதிய விதிமுறைகளை கடைபிடிக்கவுள்ள பிசிசிஐ!

ஐபிஎல் 2022: புதிய விதிமுறைகளை கடைபிடிக்கவுள்ள பிசிசிஐ!

எம்சிசியின் புதிய விதிமுறைகளை நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி – மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கும் அமைப்பாக செயல்படுகிறது எம்சிசி தற்போது கிரிக்கெட்டில் சில மாற்றங்களை எம்சிசி கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்களின் ஒரு பகுதியை ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரில் பிசிசிஐ கடைபிடிக்கவுள்ள புதிய விதிமுறைகள்:

கரோனா காரணமாக 12 வீரர்களுக்குக் குறைவான வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் (அவர்களில் 7 வீரர்கள் இந்தியர்கள்), அந்த ஆட்டம் ஒத்திவைக்கப்படும். இது சாத்தியமில்லை என்றால் ஐபிஎல் தொழில்நுட்பக் குழு ஆட்டம் குறித்த முடிவை எடுக்கும்.

ஓவ்வொரு அணிக்கும் இரு டிஆர்எஸ் முறையீடு வழங்கப்படும். தற்போது ஒரு வாய்ப்பு தான் அளிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் எம்சிசி அறிமுகம் செய்யவுள்ள விதிமுறை இது. ஐபிஎல்-லிலும் நடைமுறைக்கப்படுத்தப்படுகிறது. ஒரு வீரர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கும்போது கேட்ச் பிடிக்கும் முன்பு மறுமுனையில் இருந்த பேட்டர் மறுபக்க கிரிஸூக்குச் சென்றால் அவரால் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள முடியும். இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இப்போது புதிய பேட்டர் தான் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தால் மட்டுமே மறுமுனையில் உள்ள பேட்டர், அடுத்த ஓவரின் ஆரம்பத்தில் முதல் பந்தை எதிர்கொள்ளலாம்.

நாக் அவுட் ஆட்டங்களில் சூப்பர் ஓவரை முடிக்க முடியாமல் போனால், லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை பெற்றதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

இந்தியா முழுக்க கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மஹாராஷ்டிரத்தில் நடைபெறும் ஐபிஎல் 2022 போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. முதலில் ஏப்ரல் 15 வரை 25% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும், அதன்பிறகு கரோனா பரவலின் பாதிப்பைக் கொண்டு கூடுதல் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐயும் மஹாராஷ்டிர அரசும் முடிவு செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

#Abdh