ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் விலைபோகாத டாப் 20 நட்சத்திர வீரர்கள்_சிற்ப்பு பார்வை..!

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் விலைபோகாத டாப் 20 நட்சத்திர வீரர்கள்

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்துள்ளது. பெங்களூருவில் 2 நாட்கள் நடந்த இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் உலக அளவில் இருந்து மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்றனர். அதில் தரமான வீரர்களை வாங்குவதற்கு சற்றும் யோசிக்காத 10 அணிகளும் கோடிகளை வாரி இறைத்து தேவையான வீரர்களை வாங்கின.

2 நாட்கள் நடந்த இந்த ஏலத்தில் முதல் நாளில் 74 வீரர்கள் 2வது நாளில் 130 வீரர்கள் என மொத்தம் 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15.25 கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் இந்திய வீரர் இஷான் கிஷான் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன வீரராக சாதனை படைத்துள்ளார்.

விலைபோகாத நட்சத்திரங்கள்:

அதேபோல் ஷ்ரேயஸ் ஐயர், டேவிட் வார்னர் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்கள். மேலும் சமீபத்தில் நடந்த அண்டர்-19 உலக கோப்பையில் கலக்கிய இளம் வீரர்கள் கூட இந்த ஏலத்தில் நல்ல தொகைக்கு விலை போனார்கள்.

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் முக்கிய வீரர்களாக வலம் வந்த ஒரு சில நட்சத்திரங்கள் இந்த ஆண்டு எந்த ஒரு அணியாலும் வாங்கப்படாதது ரசிகர்களை மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அடைய செய்தது. அந்த வகையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் விலைபோகாத டாப் நட்சத்திர வீரர்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

எப்போதும் தனது ஆட்டத்தில் அனல் தெறிக்க விடக்கூடிய சுரேஷ் ரெய்னா கடந்த சில வருடங்களாக ரன்கள் குவிக்க தடுமாறி மோசமான பார்மில் இருந்து வந்தார். அத்துடன் சமீபகாலங்களாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் இவர் விளையாடாத காரணத்தால் இந்த ஏலத்தில் 2 கோடி அடிப்படை விலையில் பங்கேற்ற அவரை சென்னை உட்பட எந்த அணியும் வாங்கவில்லை.

2. ஸ்டீவ் ஸ்மித் : ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போல டி20 கிரிக்கெட்டில் இவர் மிகச் சிறப்பாக செயல்படாத காரணத்தால் 2 கோடி ரூபாய் பிரிவின் கீழ் இந்த ஏலத்தில் பங்கேற்ற அவரையும் யாரும் வாங்கவில்லை.

3. சாகிப் அல் ஹசன் : வங்கதேசத்தின் நட்சத்திர வீரர் மற்றும் நவீன கிரிக்கெட்டில் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படும் சாஹிப் அல் ஹசன் 2 கோடி ரூபாய் அடிப்படை நிலையில் பங்கேற்ற போதிலும் அவரையும் எந்த அணியும் வாங்கவில்லை. இவர் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 2 ஆல்-ரவுண்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. அடில் ரசித்: இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் அடில் ரஷித் டி20 தரவரிசையில் நம்பர் 3 பந்துவீச்சாளராக இருந்த போதிலும் 2 கோடி அடிப்படை விலையில் பங்கேற்ற அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

5. முஜீப் உர் ரஹ்மான் : 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் பங்கேற்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்த தரமான சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் முஜீப் உர் ரஹ்மானையும் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.

 

6. இம்ரான் தாஹிர் : கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த இம்ரான் தாஹிர் இம்முறை எந்த அணிக்காகவும் ஏலம் போகவில்லை. 42 வயதை கடந்த போதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இவரை வாங்க எந்த அணிக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை.

7. ஆடம் சாம்பா : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா ஐசிசி டி20 தரவரிசையில் 4-வது பந்து வீச்சாளராக உள்ளார். இருப்பினும் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் பங்கேற்ற அவரையும் எந்த அணியும் வாங்கவில்லை.

8. அமித் மிஸ்ரா : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ள அனுபவ வீரர் அமித் மிஸ்ராவை எந்த அணியும் வாங்கவில்லை.

9. மார்னஸ் லபுஸ்ஷேன் : ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் வீரராகக் கருதப்படும் மார்னஸ் லபுஸ்ஷேன் இந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிக்கும் விலை போகவில்லை. ஒரு கோடி ரூபாயை அடிப்படை விலையில் பங்கேற்ற இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்டிங் வீரராக முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10. இயன் மோர்கன் : இங்கிலாந்துக்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையை வென்று கொடுத்ததால் கடந்த சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இயன் மோர்கன் செயல்பட்டு வந்தார். ஆனால் இம்முறை அவரை எந்த அணியும் வாங்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது.

11. டேவிட் மாலன் : கடந்த வருடம் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக இருந்த இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் இந்த ஐபிஎல் ஏலத்தில் 1.5 கோடிகள் அடிப்படை விலையில் பங்கேற்ற போதிலும் யாரும் வாங்கவில்லை.

12. தப்ரிஸ் சம்சி : ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் 2 பந்து வீச்சாளராக இருக்கும் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் சம்சியை எந்த அணியும் வாங்காதது ஆச்சரியமாக உள்ளது.

13. ஷெல்டன் காட்ரல்: வெறும் 75 லட்சம் அடிப்படை விலையில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் செல்டன் காட்ரல் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

14. செடேஸ்வர் புஜாரா : கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குறைந்தபட்சம் பெஞ்சில் அமர்ந்திருந்த இந்தியாவின் அனுபவ வீரர் புஜாரா சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளிலும் ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். எனவே 50 லட்சம் அடிப்படை விலையில் பங்கேற்ற இவரை சென்னை உட்பட எந்த அணியும் வாங்கவில்லை.

15. இஷாந்த் சர்மா : ஐபிஎல் தொடங்கிய காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக இசாந்த் சர்மா இந்த ஆண்டு முதல் முறையாக எந்த அணியும் வாங்கவில்லை என்பதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க போவதில்லை.

16. பியூஸ் சாவ்லா : இந்தியாவின் அனுபவ சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கும் பியூஸ் சாவ்லாவை இந்த ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை.

17. மார்ட்டின் கப்டில் : நியூசிலாந்தைச் சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் இம்முறை ஏலத்தில் நிச்சயம் வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 75 லட்சம் அடிப்படை விலையில் பங்கேற்ற அவர் எந்த அணிக்கும் ஏலம் போகவில்லை.

18. இஷ் சோதி : அவரைப்போலவே நியூசிலாந்தை சேர்ந்த மற்றொரு வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதியும் இந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிக்காகவும் விளையாட ஒப்பந்தமாகவில்லை.

19. ராஸ்டன் சேஸ் : வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து இம்முறை பல வீரர்கள் ஏலம் போன நிலையில் அந்த அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ராஸ்டன் சேஸ் எந்த அணிக்கும் விளையாட ஒப்பந்தம் ஆகவில்லை.

20. ஆரோன் பின்ச் : ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஆரோன் பின்ச் இந்த ஏலத்தில் அடிப்படை விலை தொகைக்கு கூட எந்த அணியும் வாங்க முன் வராதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில் இவர் கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்றில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் என்ற சாதனையைப் படைத்தவர் ஆவார்.

Abdh