ஐபிஎல் 2022: வீரர்கள் விவரங்களை வெளியிட்ட லக்னோ, அகமதாபாத்…!

ஐபிஎல் 2022: வீரர்கள் விவரங்களை வெளியிட்ட லக்னோ, அகமதாபாத்

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.

பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரு புதிய அணிகளும் தேர்வு செய்த வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கேஎல் ராகுல், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் ஆகியோரை லக்னோ அணியும், ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோரை அகமதாபாத் அணியும் தேர்வு செய்துள்ளன. லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும், அகமதாபாத் அணி கேப்டனாக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் லக்னோ அணி கே.எல். ராகுலுக்கு ரூ. 17 கோடி சம்பளம் வழங்குகிறது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகச் சம்பளம் பெறும் வீரர்களில் கே.எல். ராகுல் இடம்பிடித்துள்ளது. முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு விராட் கோலியை ரூ. 17 கோடிக்கு ஆர்சிபி அணி தக்கவைத்தது.

ஸ்டாய்னிஸுக்கு ரூ. 9.20 கோடியும், பிஷ்னாய்க்கு ரூ. 4 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகின்றன.
ஆமதாபாத் அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கானுக்குத் தலா ரூ. 15 கோடி சம்பளம் வழங்குகிறது. ஷுப்மன் கில்லுக்கு ரூ. 8 கோடி சம்பளம்.

#Abdh