ஒரே நாளில் இரண்டு விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி- ரசிகர்கள் கடுமையான பிரார்த்தனையில்..!

யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன, நேற்றைய நாளில் இடம் பெற்ற பின்லாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கிடையிலான போட்டி் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில்,டென்மார்க் அணியின் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டதாக மருத்துவ தரப்பு குறிப்பிடுகின்றது. பின்லாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஏற்பட்ட இவ்வாறான துர்ப்பாக்கிய நிலை காரணமாக இடைநடுவே போட்டி இடை நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் பூரண சுகம் பெற்று திரும்ப வேண்டும் என்று முன்னாள் கால்பந்து வீரர்கள், விளையாட்டு வீரர்கள் என்று எல்லோரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டவண்ணமுள்ளனர்.

இதேநேரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற பெஷாவர் சல்மி, குவாட்டா கிலடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்காவின் வீரரும், சென்னை சூப்பர் கிங்சுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருபவருமான ஃபேப் டு பிளேசிஸ் தலையில் அடிபட்டு உபாதைக்குள்ளாகி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்றைய போட்டியின் போது டேவிட் மில்லர் அடித்த பந்து லாங் ஆன் திசையின் ஊடாக சென்றபோது அந்த பந்தை தடுப்பதற்காக எல்லைக்கோட்டருகே இருந்து ஓடிவந்த ஃபேப் டு பிளேசிஸ் , ஹஷ்னைன் இருவரும் மோதிக் கொண்டனர்.

இதன் காரணத்தால் உபாதைக்கு உள்ளான ஃபேப் டு பிளேசிஸ் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.

நேற்று சனிக்கிழமை கால்பந்தாட்ட போட்டி ஒன்றில் ஒரு வீரரும், கிரிக்கெட் போட்டியில் ஒரு வீர்ரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை ரசிகர்களுக்கு பெருத்த கவலையை தோற்றுவித்திருக்கிறது.

இருவரும் பூரண சுகம் பெற்று திரும்ப வேண்டும் என்று ஒட்டுமொத்தமான விளையாட்டு ரசிகர்கள் அத்தனை பேரும் பிரார்த்திக்கின்றனர்.