ஒலிம்பிக் தங்கத்தை நோக்கி நகர்கிறது பிரேசில் கால்பந்தாட்ட அணி ,அரையிறுதியில் மெக்சிகோவை அசத்தலாய் வென்றது..!
டோக்கியோவில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான கால்பந்து போட்டிகளின் முக்கியமான அரையிறுதி ஆட்டம் நிறைவிக்கு வந்தது.
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான மெக்சிகோ(2012) மற்றும் நடப்பு சாம்பியனான(2016) பிரேசில் ஆகிய அணிகள் இந்த அரைஇறுதி ஆட்டத்தில் முட்டிமோதின.
அவர்களுக்கு வழங்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் எதுவிதமான கோல்களையும் பெற்றுக்கொள்ளவில்லை, இதனால் மேலதிகமாக 30 நிமிடங்கள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட போதும் அந்த நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதனையும் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் 120 நிமிடங்கள் கோல்கள் அற்று போட்டி நிறைவுக்கு வந்தது.
இந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு போட்டி கொண்டு செல்லப்பட்டது.
இதனடிப்படையில் பிரேசில் கோல் காப்பாளரின் ஆற்றலால் மிகச் சிறப்பாக இந்த போட்டியில் பிரேசில் வெற்றி பெற்றிருக்கிறது.
போட்டியில் 4_1 எனும் அடிப்படையில் வெற்றி பெற்ற பிரேசில் அணி, ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறது.
இதன்மூலம் நடப்பு சாம்பியனான பிரேசில் அணி மீண்டும் ஒரு தடவை ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் தங்கம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் மெக்சிகோ அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பிரேசில் அணி 1-2 எனும் அடிப்படையில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தோல்வியை தழுவியது.
அதற்கு இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பிரேசில் பழிதீர்த்துக் கொண்டு தொடற்சியான 3 வது ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு பிரேசில் முன்னேறியுள்ளது.
ஸ்பெயின் , ஜப்பான் அணிகளுக்கிடையேயான 2 வது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி பிரேசிலை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.