ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்- விளையாட்டுத்துறை அமைச்சர்..!
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெற்றிகொள்ள ஒரு நாடு 10 முதல் 15 வருடங்கள் தயாராகின்றது. இம்முறை ஜப்பானும் அவ்வாறான தொரு முறைமையைப் பின்பற்றியே பதக்கங்களை வெற்றி கொண்டு வருகிறது. எமது நாட்டில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வேலைத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றிய மைக்க நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
விளையாட்டுக் கவுன்சில் ஊடாக 2032ஆம் ஆண்டு வரையான பத்தாண்டு திட்டமொன்றின் வழியாக இந்த இலக்கை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம்.
ஒலிம்பிக் போட்டிகளை மையப்படுத்திய நீண்டகால திட்டமொன்று செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நாம் பதக்கங்களை வெற்றிகொள்வதற்கான போட்டிகளை அடையாளம் காண வேண்டும். துப்பாக்கிச் சூடு, பளு தூக்கல் உட்பட பல்வேறு விளையாட்டுகளை அடையாளம் கண்டுள்ளோம். வெளிநாடுகளுக்கு அனுப்பி இவர்களுக்கு பயிற்சியை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் 5 பேர் இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்று விக்கப்படுகின்றனர்.
அதேபோன்று போட்டியாளர்களும் வெற்றியை இலக்கு வைத்த மன உறுதியுடன் தமது விளையாட்டை முன்னெடுக்க வேண்டும். வீரர்களின் மன வலிமையை பலப்படுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப் படுகிறது. விளையாட்டு சங்கங்களை நெறிப்படுத்த விசேட சட்டமூலமொன்றை ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
ஆகவே, குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளுடன் எமது வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.