கிரிக்கெட் T/20 உலகக்கோப்பை முடியும் தருவாயில், அடுத்த வார இறுதியில் கால்பந்து உலகக்கோப்பை துவங்கவிருக்கிறது. கிரிக்கெட் உலகக்கோப்பையை பத்து பதினைந்து நாட்டு மக்கள் ஆர்வமுடன் பார்த்திருக்கக்கூடும். ஆனால், கால்பந்து கோப்பையை ஒட்டு மொத்த உலகமும் வெறித்தனமாக பார்க்கும்.
வழக்கமாக மே – ஜூன் – ஜூலை மாதங்களில்தான் கால்பந்து உலகக்கோப்பை நடக்கும். இம்முறை வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் நடப்பதால் அந்த மாதங்களில் வெப்பம் வாட்டி வதைக்கும். ஆகவே, அங்கே சற்று கதகதப்பு குறைவாக இருக்கும் மாதங்களைக் கணக்கில் கொண்டு இப்போது நடத்துகிறார்கள்.
32 அணிகள் மோதவிருக்கின்றன.
1994 ஆம் ஆண்டு கோப்பையை வென்றதில் இருந்தே, ஒவ்வொரு முறையும் பிரேசில் அணியே கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலானோர் கணிக்கின்றனர். ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்காத ஏனைய 150 + நாட்டு மக்களுக்கும் ப்ரஸீலே தாய்நாடாக திகழ்ந்து வருகிறது. அதற்கு அடியேனும் விதி விலக்கல்ல !
2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதியில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது பிரேசில். 2006 ஆம் ஆண்டு பிரேசிலை வீழ்த்திய ஃப்ரான்ஸ் அணி இறுதிவரை முன்னேறி, இத்தலியிடம் தோற்றது.
2010 ஆம் ஆண்டு காலிறுதியில் பிரேசிலை வீழ்த்திய நெதர்லாந்து அணி, இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் தோற்றது.
இவ்வாறாக, அந்த இரண்டு தொடர்களிலும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த பிரேசிலை வீழ்த்திய அணிகள் இறுதிவரை முன்னேறி தோற்றன. அந்த இரு தொடர்களும் முறையே ஜெர்மனி மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றன.
சரி… இந்த முறை நம்ம சொந்த மண்ணில் நடக்குது. கப்பு நமக்குத்தான் என்று கெத்தாக களமிறங்கிய 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை அந்நாட்டு மக்களும் சரி, கால்பந்து ரசிகர்களும் சரி… அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். நராச்சி உள்ள புகுந்து அவன் இடத்தில் அவன் ஆளுங்க முன்னாடி ராக்கி பாய் கருடனை வெட்டி சாய்த்ததைப் போல, ப்ரஸீல் அணியை அரையிறுதி ஆட்டத்தில் பந்தாடியது ஜெர்மனி அணி. ஜீரணிக்க முடியாத தோல்வி அது.
இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வென்றிருக்க வேண்டும். ஆனால் கோப்பையில் ஜெர்மெனி பெயர் எழுதப்பட்டுவிட்டது.
2018 ஆம் ஆண்டும் பிரேசில் மீதுதான் அதிக கவனம் இருந்தது. இருப்பினும், காலிறுதியில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. அரையிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்திய ஃப்ரான்ஸ் அணி கோப்பையை வென்றது.
இதோ… நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னும் மெருகேறி, வலுவான அணியாக களம் இறங்குகிறது ப்ரஸீல். 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்கிறதா என்று பார்ப்போம்.
2010 முதல் 2018 வரையிலான கடந்த மூன்று தொடர்களில், கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தன. அந்த வகையில், நடப்பு சாம்பியன் ஃப்ரான்ஸ் என்ன செய்கிறது என்பதை உற்று கவனிக்க வேண்டும் 😊
கடந்த 15 ஆண்டுகளாக கால்பந்து உலகை கட்டியாண்ட மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவருக்கும் இது கடைசி உலகக்கோப்பைத் தொடராக அமையப்போகிறது. ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. அதே சமயம், மெஸ்ஸியின் அர்ஜென்டினா சென்ற தொடரைக் காட்டிலும், இம்முறை வலுவாக களம் காணுகிறது. ப்ரஸீல் அல்லது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உறுதி என்பதே பலரது எதிர்பார்ப்பு.
மணி ஹெய்ஸ்ட் சீசன் இரண்டில் ஒரு மத போதகராக கெளரவ வேடத்தில் தோன்றிய நெய்மார், தனது தாய்நாடு உலகக்கோப்பையை வெல்வதுதான் தனது ஆகப்பெரும் விருப்பம் என்று சொல்லியிருப்பார். அதை நிறைவேற்றுவாரா… அதற்கு எப்படியெல்லாம் முயற்சிப்பார் (!😊) என்று பொறுத்திருந்து பார்ப்போம். தவிர, ப்ரஸீல் தேசிய அணிக்காக அதிக கோல் அடித்தவர் எனும் பீலேவின் சாதனையைத் தகர்க்க, நெய்மாருக்கு இன்னும் இரண்டு கோல்களே தேவை. அதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !
தொடர் துவங்கியதும், அவ்வப்போது அப்டேட்ஸ் அள்ளி விடுவோம்.
-kanesan