கண்ணீர் மல்க விடைபெற்றார் நியூசிலாந்து ஜாம்பவான்

கண்ணீர் மல்க விடைபெற்றார் நியூசிலாந்து ஜாம்பவான்

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக ஒரு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

அந்த நிலையில் இந்த தொடரின் சம்பிரதாய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹமில்டன் நகரில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால் மற்றொரு வீரர் டாம் லாதம் நியூசிலாந்து கேப்டனாக செயல்பட்டார்.

கண்ணீர் மல்க ஓய்வு பெற்ற ராஸ் டெய்லர்:
அத்துடன் நியூசிலாந்துக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி தனது திறமையால் பல வெற்றிகளைத் தேடி கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இந்தப் போட்டியில் கடைசி முறையாக நியூசிலாந்துக்காக விளையாடினார்.

இந்த ஓய்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்ட அவர் கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

அந்த நிலையில் இந்த நெதர்லாந்து தொடருடன் டி20, ஒருநாள் கிரிக்கெட்டிலும் விடைபெற்ற அவரை உற்சாகமாக வழியனுப்ப நியூசிலாந்து நாட்டு ரசிகர்கள் இன்றைய போட்டியின்போது மைதானத்தில் கூடி இருந்தார்கள்.

மேலும் அவரின் தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளும் இந்த போட்டியில் அவர் கடைசியாக தனது நாட்டுக்காக விளையாடுவதைப் பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து துவங்கிய இந்த போட்டியின் ஆரம்பத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அப்போது நியூசிலாந்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாட்டுக்காக கடைசி முறையாக விளையாடிய ராஸ் டெய்லர் உணர்ச்சியில் கண்கலங்கி தேசிய கீதம் பாடியது காண்போரின் நெஞ்சங்களை தொட்டது.

Abdh