கண்ணீர் விட்டு அழுத இளம் பாகிஸ்தான் வீரர்.. தட்டிக் கொடுத்த ரோஹித்.. நெகிழ வைத்த சம்பவம்

கண்ணீர் விட்டு அழுத இளம் பாகிஸ்தான் வீரர்.. தட்டிக் கொடுத்த ரோஹித்.. நெகிழ வைத்த சம்பவம்

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைக்க தனி ஆளாக போராடிய இளம் வீரர் நசீம் ஷா தோல்விக்கு பின் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது ரோஹித் சர்மா நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றை செய்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போதே இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. அதன் பின் பாகிஸ்தான் அணி நிதானமாக இலக்கை நோக்கி நகர்ந்தது. ஒரு கட்டத்தில் 12 ஓவர்களுக்கு 72 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் மட்டுமே இழந்திருந்தது பாகிஸ்தான் அணி.

அதன் பின் வரிசையாக விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது. அப்போது களத்தில் இமாத் வாசிம் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி இருந்தனர். இமாத் வாசிம் நன்கு பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதால் பாகிஸ்தான அணி நம்பிக்கையுடன் இருந்தது.

ஆனால், அவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 20வது ஓவரின் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து நசீம் ஷா களத்துக்கு வந்தார். அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான். கடைசி மூன்று பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடர்ந்து இரண்டு ஃபோர் அடித்தார் நசீம் ஷா. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்தார்.

இதை அடுத்து பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தன்னால் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை என நசீம் ஷா கண்ணீர் விட்டு அழுதார். அப்போது நசீம் ஷாவின் கடைசி ஓவர் பேட்டிங்கை பாராட்டும் விதமாக ரோஹித் சர்மா அவரை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லி விட்டு சென்றார்.அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. என்னதான் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் எதிரிகளாக வெளியில் பார்க்கப்பட்டாலும் ஆடுகளத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சிறப்பானதாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.