கனடா தேசிய அணியில் சாதிக்க துடிக்கும் இலங்கைத் தமிழன் காவியன் ❤️

கனடா தேசிய அணியில் சாதிக்க துடிக்கும் இலங்கைத் தமிழன் காவியன் ❤️


கிரிக்கெட் விளையாட்டினைப் பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஒரு நாட்டின் தேசிய அணியைப் பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச அரங்கில் விளையாடுவதே அந்த வீரருக்கு கிடைக்கும் மிகப் பெரிய கௌரவமாக கருதப்படுகின்றது. 

ஒரு நாட்டினை பிரதிநிதித்துவம் செய்வது பலருக்கு கனவு என்ற போதிலும், சிலர் தங்களது அதீத முயற்சியின் காரணமாக அந்தக் கனவினை நனவாக்கியிருக்கின்றனர்.

அந்தவகையில் தனது சிறுவயதில் இருந்து மேற்கொண்ட கடின முயற்சிகள் காரணமாக கனடா நாட்டின் 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை தமிழ் பேசும் துடுப்பாட்ட வீரரான காவியன் நரேஸ் பெற்றிருந்தார்.

கனடாவினை அடுத்து தற்போது இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற காவியன் உடன் ThePapare.com ஒரு நேர்காணலினை ஒழுங்கு செய்திருந்தது. காவியன் இந்த நேர்காணலில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நம்முடன் பல விடயங்களினைப் பகிர்ந்திருந்தார்.

கே – உங்களைப் பற்றிய அறிமுகத்தை தாருங்கள்

நான் காவியன் நரேஸ். தற்போது எனக்கு 21 வயதாகின்றது. நான் ஜேர்மனியில் பிறந்தேன். எனது தந்தை யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர். எனது தாய் திருகோணமலையைச் சேர்ந்தவர். எனக்கு ஆங்கிலமும், தமிழ் மொழியும் சரளமாக பேச முடியும். நான் கனாடாவிற்கு குடிபெயர நான்கு வருடங்கள் முன்னர் வரை இலங்கையில் வசித்திருக்கின்றேன். அதனைத் தொடர்ந்து கனாடாவில் வசித்து வருகின்றேன்.

கே – கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி??

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்தேன். பின்னர் எனது தந்தையிடம் அவர்கள் என்ன விளையாடுகின்றார்கள் எனக் கேட்டேன். அது என்ன விளையாட்டு எனவும் கேட்டேன். அவர் அது கிரிக்கெட் எனக் குறிப்பிட்டார். பின்னர், அந்த விளையாட்டினை நானும் முயற்சிக்க வேண்டும் எனக் கூறினேன். அந்த தருணத்திலிருந்து நானும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருந்தேன்.

நான் விளையாட ஆரம்பித்த தருணத்தில் இருந்து எனக்கு அது மிகவும் பிடித்த விளையாட்டாக மாறிவிட்டது. பின்னர், SA அகடமியில் சேர்ந்து கிரிக்கெட் ஆடத் தொடங்கியதோடு, NCC இல் இணைந்து கிரிக்கெட் பயிற்சியாளர் லியனல் மெண்டிஸிடம் பயிற்சிகளை எடுக்கத் தொடங்கினேன்.

கே – கிரிக்கெட் விளையாட்டில் ஆரம்பத்தில் உங்களது உதவியது யார்??

கிரிக்கெட் விளையாட்டின் தொடக்கத்தில் இருந்தே எனக்கு எனது பெற்றோர்கள் உதவியாக இருந்தனர். அவர்கள் எனக்குத் தந்த ஆதரவு எனக்கு கிரிக்கெட் விளையாட்டினை தொடர்ந்து கொண்டு செல்வதற்கான ஒரு தைரியத்தினை வழங்கியது. எனது பெற்றோர்கள் இந்த விளையாட்டினை நான் ஆடுவதற்காக தங்களது முயற்சிகளை வழங்கியதோடு மட்டுமின்றி தங்களது நேரத்தினையும் ஒதுக்கி, எனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

கே – கனடாவில் உங்களது கிரிக்கெட் ஆரம்பம் எப்படி இருந்தது??

கனடாவிற்கு நாங்கள் வந்ததன் பின்னர் ஆரம்ப காலங்களில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயற்பட்ட புபுது திசாநாயக்க கிரிக்கெட் வழிகாட்டியாக செயற்பட்டிருந்தார். அவர் அப்போது கனிஷ்ட வீரர்களுக்கான பாசறை ஒன்றினை ஒழுங்கு செய்திருந்ததோடு, நான் அதில் இணைந்து கொண்டேன். இன்னும் அவர் எனக்கு துடுப்பாட்டமட்டை ஒன்றினையும் பரிசாக தந்தார். அதன் பின்னர், டொரோன்டோ கிரிக்கெட் சபையின் கனிஷ்ட அணியில் இருந்து போட்டிகளில் ஆடத் தொடங்கினேன்.

கே – கனடாவில் உங்களை ஒரு சிறந்த வீரராக வளர்த்துக் கொள்ள யார் உதவியாக இருந்தனர்??

கனடாவில் தற்போது வரை என்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வளர்த்துக் கொள்வதற்கு வில்பர்ட் பிளம்மர், புபுது திசாநாயக்க, பிரையன் ஹேல், பரோல் எரோல், மற்றும் முகேஷ் நாரூலா ஆகியோர் உதவியாக இருந்திருக்கின்றனர். இவர்களோடு முக்கியமாக டேவிட் பேடர்சன் எனக்கு முன்னணி வழிகாட்டியாக இருந்தார். இவர் எனக்கு கனடாவில் ஆரம்பத்தில் இருந்து பயிற்சியாளராக இருந்ததோடு, இப்போதும் டொரோன்டோ கிரிக்கெட்  ஸ்கேட்டிங் மற்றும் கேர்லிங் (Curling) கழகத்தில் பயிற்சியாளராக உள்ளார். இன்னும் நான் ஒரு வீரராகவும், ஒரு மனிதராகவும் உருவாக என்மீது நம்பிக்கை வைத்து, எனக்கு உதவி செய்த டேவிட் பேடர்சேனிற்கு மீண்டும் ஒரு தடவை எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கே – கனடாவின் 19 வயது கிரிக்கெட் அணிக்கு ஆடுகின்ற வாய்ப்பு எப்படி கிடைத்தது??

அங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருந்து 17 வயதின் கீழான மாகாண தொடரில் நான் நன்றாக விளையாடி இருந்ததோடு, தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராகவும் தெரிவு செய்யப்பட்டேன். இதன் பின்னர், கனடாவின் ஒன்டேரியோ ரெட் அணியில்  (Ontorio Red Team (A) வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் கனடாவின் அனைத்து மாகாண அணிகளும் பங்குபற்றிய தொடரில் நான் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, தொடரின் சிறந்த வீரருக்கான விருதினையும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் கனடாவின் 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பின் பின்னர் கனடா 17 வயதின்கீழ் அணி மேற்கொண்ட சுற்றுப்பயணங்களில் அமெரிக்கா, பெர்மூடா அணிகளுக்கு எதிராக ஆடும் வாய்ப்பு கிட்டியிருந்தது.

பின்னர் கனடாவின் 19 வயதின்கீழ் அணிகளின் போட்டிகளுக்கு முன்னர் நடைபெற்ற தெரிவுப் போட்டிகளிலும் நான் சிறப்பாக செயற்பட்டிருந்ததோடு, அதன் பின்னர் 2017ஆம் ஆண்டின் இளையோர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் ஆடுவதற்கு தெரிவு செய்யப்பட்டேன். கடுமையான போட்டி காணப்பட்ட அந்த தொடரில் எங்களுக்கு அமெரிக்கா சவாலாக இருந்த போதும், நாம் அதில் வெற்றி பெற்று 2018ஆம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத்தில் ஆடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டோம்.

கே – இளையோர் உலகக் கிண்ணத்தின் பின்னர் கனடாவில் தற்போது உங்களது கிரிக்கெட் என்ன நிலையில் உள்ளது??

தற்போது நான் டொரோன்டோ மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்காக டொரோன்டோ கிரிக்கெட்  ஸ்கேட்டிங் மற்றும் கேர்லிங் (Curling) கழகத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். கடந்த செப்டம்பரில் ஒழுங்கு செய்யப்பட்ட கனடா தேசிய T20 அணிக்கான வீரர்களை தெரிவு செய்யும் தொடரில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, அந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற நான்கு வீரர்களில் ஒருவராக மாறியிருந்தேன். அந்த தொடரில் நான் இன்னிங்ஸ் ஒன்றில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக இருப்பதோடு, அந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராகவும் காணப்படுகின்றேன்.

நான் தற்போது கனடாவில் சிரேஷ்ட வீரர்களுக்கான குழாத்தில் காணப்படுவதோடு, இந்த ஆண்டு நடைபெறவுள்ள குளோபல் T20 தொடரினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

கே – கனடாவினை அடுத்து நீங்கள் தற்போது இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதாக அறியக் கிடைக்கின்றது. அது பற்றி கூற முடியுமா??

நான் 2018ஆம் ஆண்டு முதன் முறையாக SSC கழகத்தின் 23 வயதின் கீழ்ப்பட்ட அணிக்காக ஒரு போட்டியில் ஆடியிருந்தேன். குறித்த போட்டி அப்போது நடைபெற்ற முதன்மை தொடரின் காலிறுதிப் போட்டியாக அமைந்திருந்ததோடு அப்போட்டியில் நான் 40 ஓட்டங்களையும் எடுத்திருந்தேன். அப்போட்டியின் பின்னர் SSC கழக அணி அந்த தொடரின் சம்பியன் பட்டத்தினையும் வென்றிருந்தது. அதேநேரம் இந்த பருவகாலத்தில் நான் புளூம்பீல்ட் அணிக்காக ஆடி வருவதோடு இம்முறை 5 போட்டிகளில் ஆடி 5 அரைச்சதங்கள் அடங்கலாக 312 ஓட்டங்களை குவித்திருக்கின்றேன். இந்த ஆண்டின் பிற்பகுதியில் புளூம்பீல்ட் அணி விளையாடும் போட்டிகளில் ஆடுவதற்கு ஆர்வமாக உள்ளேன்.

கே – உங்களது கிரிக்கெட் விளையாட்டில் பிடித்த வீரர் மற்றும் விளையாட்டில் பிடித்த வீரர் யார்??

கிரிக்கெட்டில் எனக்கு குமார் சங்கக்கார மற்றும் ஏபி.டி.வில்லியர்ஸ், மற்றும் ஷேன் வோர்ன் ஆகிய வீரர்களை பிடிக்கும். அத்துடன் விடா முயற்சியுடன் கூடிய மனநிலையினை வெளிப்படுத்துகின்ற அமெரிக்க கூடைப்பந்துவீரர் கோபே பிரையன்டினையும் பிடிக்கும்.

கே – உங்களது எதிர்கால இலட்சியமாக இருப்பது என்ன??

சிரேஷ்ட வீரர்கள் ஆடுகின்ற தேசிய அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைக்குமிடத்து எனது கனவு நனவாகியதாக கருதுவேன். அத்துடன் இந்தியன் பிரீமியர் லீக், குளோபல் T20 லீக், லங்கா பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுவதும் எனது விருப்பமாக காணப்படுகின்றது.

கே – கிரிக்கெட்டினை வாழ்க்கையாக எடுக்க விரும்பும் இளம் சந்ததியினருக்கு நீங்கள் கூற விரும்புவது??

இளம் கிரிக்கெட் வீரர்களும், விளையாட்டு வீரர்களும் அவர்களது விளையாட்டினை ஆடும் சந்தர்ப்பத்தில் நீங்கள் அதனை இரசித்தும் பொறுமையாக ஆட வேண்டும் என்பதே எனது அறிவுரையாக காணப்படுகின்றது. உங்களின் மீது நம்பிக்கை வைத்து கடினமாக உழைக்கும் போது உங்களால் வெற்றி பெற முடியும். உங்களது விளையாட்டு வாழ்க்கையில் சில சரிவுகள் வந்த போதும், இலக்குகளை அடைவதற்கான  மனப்பாங்குடன் இருப்பது சிறந்தது.

நன்றி -Thepappare