கம்பேக்னா இப்டி இருக்கணும் – தெறிக்கவிட்ட கவாஜா!!

கம்பேக்னா இப்டி இருக்கணும்!!

இந்த ஆஷஸ் தொடர் ஆரம்பிக்கும் முன்பு, ஆஸ்திரேலிய அணிக்கு இருந்த முக்கிய கேள்வி தொடக்க வீரராக யார் ஆடுவது என்பதுதான். ஹாரிஸ், கவாஜா என இரண்டு பேரில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இந்த ஆஷஸ் தொடருக்கு முன்பு நடந்த நான்கு முதல் தர போட்டிகளில் கவாஜா இரண்டு சதம், இரண்டு அரை சதம் என அடித்து மிரட்டியிருந்தார். ஹாரிஸோ ஆஷஸுக்கு முன்பு நடந்த மூன்று முதல் தர போட்டிகளில் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்திருந்தார். இருந்தாலும் முதல் ஆஷஸ் போட்டிக்கு கவாஜாவுக்கு பதிலாக ஹாரிஸ் தான் ஆட வைக்கப்பட்டார். ஒருவேளை கவாஜாவுக்கு தொடக்க வீரராக ஆட வராதோ என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் அதை அப்படியே அழித்து விடுங்கள். இதுவரை டெஸ்ட்டில் 7 இன்னிங்ஸ்கள் தொடக்க வீரராக ஆடி 97 என்ற சராசரியை வைத்திருப்பவர் கவாஜா.

மதம், நாடு, நிறம் எல்லா விதத்திலும் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம் இருந்து தனிமைப்பட்டே இருந்தவர் கவாஜா. அவரின் சிறு வயதில் ‘நீயெல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு ஆட முடியாது’ என பலர் அவரிடம் கூறியுள்ளதாக அவரே கூறினார். இப்படி பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து ஆஸ்திரேலிய அணிக்குள் வந்தாலும் கடந்த 2019-ம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்டார் கவாஜா. இதில் கொடுமை என்னவென்றால், அவர் நீக்கப்பட்ட ஆண்டில் அவரது ஒரு நாள் போட்டிகளின் சராசரி 50.

இந்த ஆஷஸ் தொடரில்கூட, தொடக்க வீரராக 30 சராசரியை வைத்திருக்கும் ஹாரிஸ் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டார். டிராவிஸ் ஹெட் இல்லாததன் காரணமாக மட்டுமே கவாஜாவுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் அவர் இதற்கு முன் ஆடாத ஐந்தாவது பொசிஷனில். அதை கெட்டியாக பிடித்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரண்டு சதம் விளாசியுள்ளார் கவாஜா. அதிலும் குறிப்பாக இரண்டாம் இன்னிங்ஸில் பெரிதாக டாப் வீரர்கள் யாரும் பார்ட்னர்ஷிப் அமைக்காத போதும் அட்டகாசமாக ஆடி சதம் கடந்தார்.

ஒரே போட்டியில் இரண்டு சதம். இனி கவாஜா வாழ்வில் வசந்தம் வந்துவிடுமா என்றால் இன்னமும் கூட அது சந்தேகம் தான். இரண்டு சதம் அடித்த பிறகு கூட அடுத்த டெஸ்ட்டில் தான் இருப்பது சந்தேகம் தான் என கவாஜா கூறுகிறார். காரணம் கவாஜா போன்றோர் எல்லைக்கோட்டை தொட்ட பிறகும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது!

?Wilson