கழக மட்டப் கிரிக்கெட்டில் விக்கெட் வேட்டை நடத்தும் யாழ் மைந்தன் விதுசன்_ ஹரி வாகீசனின் இன்னும் ஒரு கண்டுபிடிப்பு தேசிய கிரிக்கெட்டை நோக்கி…!
மர்ம சுழற்பந்து வீச்சாளர்களைக் கண்டறிவதில் கிரிக்கட் ரசிகர்களுக்கு அதீத கவனிப்பும் விரும்பும் இருக்கின்றது,
ஏனென்றால் அவர்கள் கையையும் கிரிக்கெட் பந்தையும் அவர்கள் மிகவும் நன்றாகத் திருப்பி, வளைத்து, மாற்றியமைக்கத் தெரிந்தவர்கள், பந்து என்ன செய்யும் என்று தெரியாமல் துடுப்பாட்ட வீரர்கள் கிலிகொள்ளச் செய்துவிடும்.
இலங்கையின் தேசிய வீர்ர்களான அஜந்த மெண்டிஸ், லக்ஷான் சண்டகன், அகில தனஞ்சய மற்றும் தற்போது மஹீஷ் தீக்ஷனா ஆகியோர்ய மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். தரிந்து கௌஷல் மற்றும் கெவின் கொத்திகொட போன்ற பலர் உள்நாட்டு கிரிக்கெட்டில் அசாதாரண பந்துவீச்சுடன் பந்துவீசியுள்ளனர்.
இவர்களைப் பற்றிய ஓர் நீண்ட பட்டியலையும், விளக்கத்தையும் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஏன் தருகிறேன் என்றால் இப்போது இளைஞர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் ஒரு இளம் LeftArm Orthodox பந்துவீச்சாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விதுசன்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விதுசன் இப்போது இலங்கையில் இடம்பெற்று வருகின்ற கழகமட்ட கிரிக்கெட் தொடரில் எல்லோரது கவனத்தையும் தன்பால் ஈர்த்து இருக்கின்றார்.
தற்போது நடைபெற்று வரும் மேஜர் கிளப் எமர்ஜிங் (Major club emerging )மூன்று நாள் போட்டியை யாரேனும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தால், மூர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடும் தீசன் விதுசன் என்ற பந்து வீச்சாளரை உற்று நோக்கியிருப்பீர்கள்.
பல துடுப்பாட்ட வீர்ர்களை மெய்சிலிர்க்கச் செய்த அவரது அசாதாரணமான இடது கை மரபுவழி சுழலின் மூலம் மூர்ஸ் SC க்கு விதுசன் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார். மூர்ஸ் SC அணியானது இதுவரை நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் A குழுவில் உள்ள மற்ற அனைத்து கிளப்புகளையும் விட முன்னணியில் இருப்பதற்கும், இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கும் விதுசன் தான் காரணம் எனலாம்.
நான்கு போட்டிகளில், விதுசன் மூன்று ஐந்து விக்கட் பெறுதிகளும், மற்றும் ஒரு 10 விக்கெட் பெறுதியையும் கைப்பற்றி மொத்தம் 31 விக்கெட்களுடன் (சராசரியாக 15.03) போட்டித் தொடரில் (தமிழ் யூனியன் அணியின் சுதீர திலகரத்னவுடன்) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக திகழ்கின்றார்.
மூர்ஸ் SC தலைமை பயிற்சியாளர் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சாமர கபுகெதர விதுசனை “தனித்துவமான ” பந்து வீச்சாளர் என்று விவரித்தார்.
“அவர் ஒரு இடது கை ஸ்பின்னராக இருந்தாலும் அவர் உண்மையில் வித்தியாசமான ஆற்றலைக் கொண்டிருக்கிறார். அவரது சிறப்பு என்னவென்றால், அவர் விக்கெட்டுகளைப் பெறுகிறார், அவர் பந்தை திருப்புகிறார், அவர் நேராக பந்து வீசுவார். அவர் நல்ல மாறுபாடுகள் மற்றும் நல்ல கட்டுப்பாடு மற்றும் நீண்ட வடிவ போட்டிகளுக்கு (Long Format) பந்து வீசக்கூடியவர் என்பதாகும். விதுசன் முக்கியமாக இடது கை வீரர்களுக்கு நன்றாக பந்து வீசுகிறார், ”என்று சாமர கபுகெதர இவரைப்பற்றி புகழ்ந்து கூறினார்.
“அவர் கடந்த 23 வயதுக்குட்பட்ட பருவங்களில் சுமார் இரண்டு போட்டிகளில் விளையாடிவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் சென்றார். அவர் அங்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் இருந்தார், ஆனால் அவர் அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை எனவும் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது, மேம்படுத்த வேண்டும். அவர் ஒரு சிறந்த வீரராக இருப்பதற்கான அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளாராயினும் களத்தடுப்பை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
மூர்ஸ் கழக விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் நவ்ரூஸ் இக்பால் கூறுகையில், அவர்களது கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான தினேஷ் ஷாஃப்டர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். மூர்ஸ் SC கிரிக்கெட் சீசனில் கொழும்பில் தங்குவதற்கு வாராந்த உணவு கொடுப்பனவை செலுத்தி தங்குவதற்கு தங்குமிடங்களை வழங்கிய வெளியூர்களைச் சேர்ந்த 10 வீரர்களில் இவரும் ஒருவர்.
20 வயதான விதுசன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அங்கு அவர் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரிய போட்டிகள் உட்பட யாழ் மத்திய கல்லூரிக்கான 19 வயதுக்குட்பட்ட முதல் பதினொருவர் அணியில் மூன்று ஆண்டுகள் விளையாடினார். அவர் முதலில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி கிரிக்கெட் வீரர் சுரேஷ் மொஹமட் அவர்களால் முதலில் பயிற்றுவிக்கப்பட்டார் என்பதும் சிறப்புக்குரியது.
“எனது தந்தை ஒரு பெரிய இலங்கை கிரிக்கெட் ரசிகர், அவர் யாழ்ப்பாணத்தில் நடக்கும் பள்ளி Big Match உட்பட போட்டிகளைப் பார்க்க என்னை அழைத்துச் செல்வார், அப்படித்தான் நான் விளையாட்டை விரும்ப ஆரம்பித்தேன்” என்று விதுசன் கூறினார்.
“கிரிக்கெட் விளையாடுவது எனது முக்கிய லட்சியம், அதை ஒரு தொழிலாக மாற்ற வேண்டும். அடுத்த ஆண்டு திறந்த பல்கலைக்கழகத்தில் நுழைந்து வரலாற்றில் டிப்ளமோ படிக்கவும் எதிர்பார்க்கிறேன் எனவும் விதுசன் தெரவித்தார்.
விதுசனின் தந்தை யாழ்ப்பாணத்தில் ஒரு விவசாயி மற்றும் அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் மூத்தவர். அவரது 10 மற்றும் 9 வயதுடைய இரண்டு இளைய சகோதரர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கிறார்கள்.
நடப்பு இலங்கை கிரிக்கெட் பருவத்தில் தனது வெற்றிக்கு மூர்ஸ் எஸ்சியில் உள்ள தனது அணி வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த ஆதரவே காரணம் என்று விதுசன் கூறுகிறார்.
“எனது அணித்தலைவர் தினுக (தில்ஷான்) மற்றும் ஏனைய அனைத்து மூத்த வீரர்களிடமிருந்தும் எனக்கு நிறைய ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் என்னை எல்லா நேரத்திலும் ஊக்குவிக்கிறார்கள். அயனா (சிறிவர்தன) மற்றும் உபேந்திரா (வர்ணகுலசூரிய) ஆகியோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, ஒரு முனையில் ஏற்படுத்தும் அழுத்தத்தினூடாக மற்றொன்றில் இருந்து விக்கெட்டுகளை எடுக்கும்போது அழுத்தத்தை உருவாக்குகிறோம். எனது சக வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் கிளப் அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவால் நான் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளேன். என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்” என்றார் விதுசன்.
“மூர்ஸ் எஸ்சியில் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மனதளவில் வலுவாக இருக்க கற்றுக் கொடுத்தது. பீல்டிங் பெரும் பங்கு வகிக்கிறது. களத்தில் தவறு செய்யும் போது விக்கெட்டுகளை பெற முடியாது. உடற்தகுதியும் முக்கியம். அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் அனுபவத்தையும், புல்தரை (Turf) ஆடுகளங்களில் விளையாடிய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன், ”என்று அவர் கூறினார்.
விதுசன் தனது மர்ம பந்து (Mystery) “எனது ரகசிய ஆயுதம், இது அனைவருக்கும் தெரியக்கூடாது” என்று கூறினார், ஆனால் வேகமான கை பந்துகள், கேரம் பந்து, லூப், ஃப்ளைட், ஸ்லோ பந்துகள் மற்றும் கிரீஸைப் பயன்படுத்தி கோணங்களை உருவாக்கி தனது விக்கெட்டைப் பெற்றதாக ஒப்புக்கொண்டார். இந்த பந்துகளை மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்தும், கிரிக்கெட் வீடியோக்களைப் பார்த்தும் தான் பந்து வீச கற்றுக்கொண்டேன் என்றார்.
“என்னுடைய கனவு நாயகர்கள் ரங்கன ஹேரத் மற்றும் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா. ரங்கனவைப் பார்த்து நல்ல ஏரியாக்களில் பந்து வீசக் கற்றுக்கொண்டேன். அவர் மிகவும் கடினமான பந்து வீச்சாளர், குறிப்பாக அவரது பந்துவீச்சில் விளையாடுவது எளிதானது அல்ல. ஜடேஜாவிடம் இருந்து பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மற்றும் எப்படி டர்ன் (Turn) மற்றும் பவுன்ஸ் (Bounce) செய்ய வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன் என்றார் விதுசன்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் அன்மையில் அறியப்பட்டவர் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜப்னா கிங்ஸ் அணி கிரிக்கெட் பணிப்பாளர் ஹரி வாகீசனால் சர்வதேச கிரிக்கெட் ஆர்வலர்களின் பார்வையை பெற்ற விஜயகாந்த் வியாஸ்காந்த் வரிசையில் இப்போது கழக மட்டப் போட்டிகளில் Jaffna Kings அணியின் Director ஹரி வாகீசன் ஏற்பாட்டில் கொழும்பின் பிரபல கழகத்திலே இணைத்து விடப்பட்டவரே விதுசன் என்பதும் இங்கே சிறப்புக்குரிய தகவல் எனலாம்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரும் ஏக்கமாக இருக்கின்ற குறையை ஜப்னா கிங்ஸ் அணி மட்டுமல்லாது, அதன் பணிப்பாளராக இருக்கின்ற ஹரி வாகீசனின் பின்புலத்தில் ஏதோ கழக மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகளாவது நம் தமிழ் பேசும் வீரர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயமே.
விஜயகாந்த் வியாஸ்காந்த் அதே போன்று விதுசன் இவர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான தமிழ் பேசுகின்ற வீரர்கள் கழக மட்டப் போட்டிகளில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் இதுவரை அறிந்திராத விடயம் என்பேன்.
விஜயகாந்த் வியாஸ்காந்த்- தமிழ் யூனியன்
நிதுசன் (கிளிநொச்சி) – தமிழ் யூனியன்
ஷாருஹன் (கோட்டைமுனை எஸ்சி, மட்டக்களப்பு) – தமிழ் யூனியன்
தெய்வேந்திரம் டினோஷன் (யாழ்ப்பாணம்) – SSC
கவியன் நரேஸ் (கனடா) ப்ளூம்பீல்ட் கழகம்
இயலரசன்- ப்ளூம்பீல்ட் கழகம்
இப்படி ஏராளமான தமிழ் பேசுகின்ற வீரர்கள் இப்போது கொழும்பின் பிரபல கழகங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டு கழகமட்ட கிரிக்கெட் ஆடி வருகிறார்கள் என்பதே மிகப்பெரிய பிரகாசமான கிரிக்கெட் எதிர்காலத்திற்கான சமிக்ஞை எனலாம்.
பாடசாலை கிரிக்கெட்டில் மட்டும் விளையாடிக்கொண்டு, தமிழ் பேசும் கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணிகளில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்கின்ற வெட்டிப்பேச்சை விடுத்து, முதலடி இப்போது எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.
கழகமட்ட கிரிக்கெட் விளையாடி அதனூடான திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலமாகவே தேசிய கிரிக்கெட் அணிகளில் தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கான சந்தர்ப்பத்தை ஈட்டிக் கொள்ளலாம் எனும் தெளிவான + தூரநோக்கு சிந்தனையில் ஜப்னா கிங்ஸ் அணியின் பணிப்பாளர் ஹரி வாகீசன் செயற்படுகின்றமை உண்மையில் தமிழ் பேசும் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டிய விடயமாக இருக்கிறது.
கிரிக்கெட் தொடர்பான வேட்கை தொடரட்டும், தமிழ் பேசும் வீரர்கள் தேசிய அணிகளை அலங்கரிக்கட்டும்.
வாழ்த்துக்கள் ஹரி வாகீசன்மற்றும் விதுசன் ?????
எஸ் .முகுந்தன்.