கவலை வேண்டாம் ஒன்னும் பண்ண முடியாது.. கோலி பற்றி ரோஹித் உறுதியா சொல்லிட்டாரு.. கிர்த்தி ஆசாத்..!

கவலை வேண்டாம் ஒன்னும் பண்ண முடியாது.. கோலி பற்றி ரோஹித் உறுதியா சொல்லிட்டாரு.. கிர்த்தி ஆசாத்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதை அனைவரும் அறிவோம். அதில் பல குழப்பத்திற்கு பின் பாண்டியாவுக்கு பதிலாக 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மா மீண்டும் இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்று ஜெய் ஷா சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.

ஆனால் அந்த உலகக் கோப்பையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை கழற்றி விடுவதற்கு தேர்வுக் குழு முடிவு எடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வருகின்றன. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உள்ள பிட்ச்கள் சற்று ஸ்லோவாக இருப்பது வழக்கமாகும். மறுபுறம் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் சற்று நிதானமாக விளையாடி நன்கு செட்டிலான பின்பே அதிரடியாக விளையாடக் கூடியவர்.

ரோஹித்தின் ஆதரவு:

எனவே அந்த அணுகுமுறை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பொருந்தாது என்று கருதும் தேர்வுக்குழு விராட் கோலியை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எது எப்படி இருந்தாலும் விராட் கோலி கண்டிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று ரோகித் சர்மா உறுதியாக தெரிவித்துள்ளதாக 1983 உலகக்கோப்பை வென்ற முன்னாள் வீரர் கிர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவேற்றியுள்ளது பின்வருமாறு. “வெளிவரும் செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அஜித் அகர்க்கர் தன்னையோ அல்லது மற்ற தேர்வாளர்களையோ சமாதானப்படுத்த முடியவில்லை. ரோகத் சர்மாவிடம் இது பற்றி ஜெய் ஷா கேட்டார். ஆனால் எந்த நிலையிலும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு விராட் கோலி தேவை என்று ரோகித் சர்மா சொல்லி விட்டார்”

“எனவே விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார். அணி தேர்வுக்கு முன்பாக அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார். இதே போல ஸ்டுவர்ட் ப்ராட், டேல் ஸ்டைன், முகமத் இர்பான் போன்ற வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் டி20 உலகக் கோப்பையில் கண்டிப்பாக விராட் கோலி விளையாட வேண்டும் என்று சமீபத்தில் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அந்த சூழ்நிலையில் கிர்த்தி ஆசாத் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது விராட் கோலி ரசிகர்களிடம் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2024 தொடரில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார். அதில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றே சொல்லலாம்.