காஷ்மீர் பிரீமியர் லீக் தொடரினை அங்கீகரிக்க வேண்டாம் – BCCI
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI), இந்திய – பாகிஸ்தான் பிளவிற்கு காரணமாக இருக்கும் காஷ்மீர் பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள காஷ்மீர் பிரீமியர் லீக் (KPL) தொடருக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ICC) வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
பாகிஸ்தானின் T20 தொடராக இருக்கும் காஷ்மீர் பிரிமியர் லீக், இம்மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ளதோடு, இந்த தொடரில் பங்கெடுக்க விருப்பம் காட்டிய வெளிநாட்டுவீரர்களில் ஒருவரான ஹேர்சல் கிப்ஸிற்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது.
அதேநேரம், காஷ்மீர் பிரீமியர் லீக் போன்ற தமது ஆளுகைக்குள் வருகின்ற கிரிக்கெட் தொடர் ஒன்றில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலையீடு மேற்கொள்வது வருத்தம் தருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) குறிப்பிட்டிருக்கின்றது.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையில் காஷ்மீர் பிரதேசம் தொடர்பான அரசியல் பிரச்சினைகள் இருந்துவருகின்றன.
அதேநேரம், இந்த T20 தொடர் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் முஷப்பராபாத்தில் இடம்பெறுகின்றது.
எனவே, இந்த விடயங்களை கருத்திற்கொண்டே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை குறித்த தொடர் பற்றி சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் முன்வைத்திருக்கின்றது.
இதேநேரம், ஆறு அணிகள் பங்கெடுக்கும் காஷ்மீர் பிரிமியர் லீக் T20 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர்களான சஹீட் அப்ரிடி, மொஹமட் ஹபீஸ் மற்றும் சொஹைப் மலிக் போன்ற வீரர்கள் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#ABDH