குருனல் பண்டியாவை விட்டு தாயகம் திரும்ப தயாராகும் இந்தியா, பிசிசிஐ அதிரடி நடவடிக்கை..!
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (27) இடம்பெற திட்டமிடப்பட்டது.
ஆயினும் இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் குருனல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாவது போட்டி இன்றும்(28), மூன்றாவது இறுதியுமான போட்டி நாளைய (29) நாளிலும் நடைபெறுவதற்கு மீள் அட்டவணைப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் பாண்டியாவுடன் தொடர்பிலிருந்த 8 பேர் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்பட்டனர் , அவர்களுக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த 8 பேருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்படாததை தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் .
ஆயினும் குறித்த 8 வீரர்களும் மைதானத்திற்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று அறிய வருகிறது, அந்த 8 வீரர்களும் யார் எனும் விபரத்தை இதுவரைக்கும் இந்திய கிரிக்கட் சபை அறிவிக்கவில்லை .
பாண்டியாவுடன் நேரடி தொடர்பு கொண்ட வீரர்கள் மைதானத்திற்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்பதோடு, அடுத்துவரவுள்ள போட்டிகளில் அவர்களுக்கு பங்கேற்க சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் அறியவருகின்றது.
இத்தோடு சேர்த்து பாண்டியாவின் கொரோனா காரணத்தால் தொடரை முடித்துக்கொண்டு நாளை மறுதினம் (30) இந்தியா திரும்பும் வீரர்களோடு பயணம் மேற்கொள்வதில் இருந்தும் குருனல் பாண்டியா விலக்கப்பட்டுள்ளார் .
இந்திய வீரர்களுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
தொற்றிலிருந்து விடுபட்ட பின்னரே பாண்டியாவின் இந்திய பயணம் அமையும் எனவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
முதலாவது போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.