குல்தீப்-சஹால்- ஜடேஜா இவர்களில் எந்த காம்பினேஷன் இந்தியாவுக்கு சிறந்தது?

இந்தியாவின் முதல்தெரிவு சுழல் பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோரே காணப்படுகின்றனர். 2017 Champions Trophy க்கு பின்னரான காலகட்டங்களில் அதுவே நிலமையாகவும் இருக்கின்றது.
இவர்கள் இருவருமாக சேர்ந்து விளையாடிய 34 போட்டிகளில் 118 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர், ஆனால் சஹால் இல்லாமல் குல்தீப் யாதவ் மட்டுமே விளையாடிய போட்டிகளில் குல்தீப் யாதவ் அவ்வளவு பெரிதாக தாக்கம் செலுத்தவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை உருவாக்குகின்றது.
சஹால் இல்லாமல் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜாவுடன் விளையாடிய போட்டிகளில் வெறுமனே 25 போட்டிகளில் 36 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
என்னை பொறுத்தவரையில் 2017 Champions Trophy க்கு பின்னரான காலத்தில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணிக்கு பதிலாக அணிக்குள் நுழைந்த குல்தீப்- சஹால் ஆகிய மணிக்கட்டு(Wrist Spin) சுழல் பந்துவீச்சு ஜோடி ஒருநாள் போட்டிகளில் அதிக ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இதனாலேயே தென் ஆபிரிக்க அணியை அவர்கள் மண்ணில் வைத்து 2018 இல் 5-1 என்றும், நியூசிலாந்து அணியை கடந்த ஆண்டு அவர்கள் மண்ணில் வைத்து 4-1 என்றும் இந்திய அணியால் ஒருநாள் தொடரில் இலகுவாக வெற்றிகொள்ள முடிந்தது.
இருவரும் Middle overs களில் அதிகமாக இணைப்பாட்டத்தை பிரிப்பதோடு, குறித்த ஓவர்களில் அதிக விக்கெட்களையும் தகர்த்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்கின்றார்கள். குறித்த காலப்பகுதியில் எதிரணிகளின் சகல விக்கெட்களையும் அதிக தடவை கைப்பற்றிய அணியாக இந்தியா திகழ்வதற்கு இவர்கள் இருவரதும் விக்கெட் வீழ்த்தும் திறமையே காரணமாகும்.
2017 Champions Trophy க்கு பின்னர் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்ட ஜடேஜா 2018 செப்டம்பரில் ஆசிய கிண்ணத்துக்கான அணித்தேர்வில் அணிக்குள்ளே கொண்டுவரப்பட்டார். அதிலிருந்து அணித்தேர்வு முறையில் பாரிய குழப்பத்தை அணித்தலைவர் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணி முகாமைத்துவத்தினர் சந்தித்து வருகின்றனர்.
ஜடேஜாவின் மீள்வரவு குல்தீப்-சஹால் ஜோடி தொடர்ச்சியாக சேர்ந்து விளையாடுவதில் சிக்கல்களை தோற்றுவித்து, ஒருவித குழப்பகரமான அணித்தேர்வையும் உண்டுபண்ணியுள்ளது,
அதாவது ஜடேஜா, குல்தீப், சஹால் ஆகிய மூவரில் யாரை அணியில் வைத்திருப்பது என்பதுவே அந்த சிக்கலாகும், அது உலக கிண்ண போட்டிகளிலும் இந்தியாவுக்கு தாக்கத்தை உண்டு பண்ணியது.
ஜடேஜா ஒரு அற்புதமான வீரர், இப்போதைய இந்திய அணியின் முதல் தெரிவு களத்தடுப்பாளர், அற்புதமான சகலதுறை வீரர், அதிரடியாக துடுப்பாடுவதிலும் வல்லவர், ஆனால் விக்கெட்களை வீழ்த்த கொஞ்சம் தடுமாறுபவர்.
ஒரு நாள் போட்டிகளில் மத்திய வரிசையில் சிக்கனமாக பந்து வீசுவதை விடவும், இணைப்பாட்டங்களை தகர்த்து விக்கெட்களை சீரான இடைவெளியில் கைப்பற்றுவதே அணிக்கு பலமானது மட்டுமல்லாமல் மிகவும் அவசியமானதும். அதிலே ஜடேஜாவும், அஷ்வினும் தடுமாறியமையே அவர்களது பலவீனமாகும். அங்கேதான் குல்தீப் -சஹால் ஜோடி எல்லோரையும் பிரமிக்க வைத்து அஷ்வின்- ஜடேஜா ஜோடியை நமக்கு மறக்க செய்தது.
இதுவரை 162 ஒருநாள் போட்டிகளில் 185 விக்கெட்களை ஜடேஜா கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு 4.90 எனும் அடிப்படையில் சிக்கனமாக ஓட்டங்களை வீட்டுக் கொடுத்தாலும் 36.1 ஓட்டங்களை வழங்கிய பின்னரே அவரால் விக்கெட்களை கைப்பற்ற முடிகின்றது.
ஆனால் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோரது Strike Rate ஜடேஜாவோடு ஒப்பிடுகின்ற நிலையில் மிக சிறப்பாக இருக்கின்றது.
இவர்கள் இருவருமாக சேர்ந்து விளையாடிய 34 போட்டிகளில் 118 விக்கெட்களை தம்மிடையே பகிர்ந்துள்ளனர், அண்ணளவாக இருவரது பந்து வீச்சிலும் ஒவ்வொரு போட்டியிலும் 4 விக்கெட்களாவது கிடைக்கின்றன.
ஆரம்ப வேக பந்து வீச்சாளர்கள் 1 அல்லது 2 விக்கெட்களையாவது கைபற்றிக் கொடுக்க, மத்திய ஓவர்களில் இவர்கள் இணைந்து 4 விக்கெட்களை கைப்பற்றுவார்களாக இருந்தால், எதிராணிகள் இலகுவாகவே சிக்கலை சந்தித்து விடுகின்றன. இதுதான் இவர்கள் இருவரது பிளஸ் பொயிண்ட்.
அனால் சிக்கல் என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் துடுப்பாட்டம் கொஞ்சமும் வராது. இந்தியாவின் பந்து வீச்சாளர்களால் அணிக்கு ஓட்டங்களைக் குவித்து ஒத்துழைப்பு வழங்க முடியாது உள்ளமை மிகப்பெரிய தலையிடி.
பூம்ரா, சாமி, குல்தீப், சஹால் என்று இந்த வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது, ஆகவே அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு ஜடேஜாவை அணிக்குள் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அணி தேர்வின் போது ஏற்பட்டு விடுகின்றது. காம்பீர், யுவு, ரெயினா என்ற இடது கை துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் தவான் மட்டுமே இப்பொழுது இருக்கின்றார். இங்கேயும் ஜடேஜா தேவையாகின்றார்.
2018 செப்டெம்பரில் ஜடேஜா அணிக்கு மீளவும் திரும்பியதற்கு பின்னர் 8 போட்டிகளில் 14 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார், 2019 ஜனவரிக்கு பின்னர் ஜடேஜா 18 ஒருநாள் போட்டிகளில் வெறுமனே 16 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார், ஒட்டு மொத்தத்தில் 2017 Champions Trophy க்கு பின்னர் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டதற்கு பின்னர் அணிக்கு மீளவும் திரும்பியவரால் 26 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 30 விக்கெட்களையே கைப்பற்ற முடிந்துள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
இதனிடையே உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னர் 44 போட்டிகளில் 87 விக்கெட்கள் கைப்பற்றி போட்டிக்கு இரு விக்கெட்கள் வீதமாக அசத்திக்கொண்டிருந்த குல்தீப் யாதவ்,
உலக கிண்ண போட்டிகளுக்குப் பின்னர் கொஞ்சம் குல்தீப் யாதவ் தடுமாறுகின்றார் 15 போட்டிகளில் 15 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இதிலே 5 போட்டிகளில் விக்கெட்கள் கிடைக்கவில்லை. இன்றுவரை 59 போட்டிகளில் மொத்தமாக 102 விக்கெட்களை குல்தீப் கைப்பற்றியுள்ளார்.
குல்தீப் யாதவ், சஹால், ஜடேஜா இந்த மூவரோடும் இந்திய அணி சில போட்டிகளிலும் விளையாடி இருக்கின்றது, ஆனால் இந்த 3 பேரையும் எல்லா போட்டிகளிலும் விளையாட வைக்க முடியாது.
இந்த சிக்கலுக்குள் இருந்து மீள்வதாக இருந்தால் இதிலே 2 தீர்மானங்களுக்கே வரக்கூடியதாக இருக்கும்.
1.ஜடேஜா என்னதான் மிரள வைக்கும் களத்தடுப்பு வீரராகவும், பெறுமதியான சகலதுறை வீரராக இருந்தாலும் அவரை வெளியில் வைத்திருக்க வேண்டும்.
2.அப்படியும் இல்லாது ஜடேஜா ஒரு புறத்தே விளையாடினால் நிச்சயமாக இன்னுமொரு இடது கை சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை அணியில் சேர்க்காது வலதுகை சுழல் பந்தாளர் சஹாலை அணிக்குள் கொண்டு வரவேண்டும்.
இவை இரண்டுமே யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் இருக்கும்.
மிரள வைக்கும் துடுப்பாட்ட வல்லமை பொருந்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு, ஓட்டங்களை கட்டுப்படுத்தும் பந்து வீச்சாளரை விட ஊடறுத்து உடைக்கும் (Break Through) ஏற்படுத்தவல்ல பந்து வீச்சாளர்களே தேவையாக இருக்கின்றது, அதுதான் அணிக்கும் உசிதமானது.
லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, தவான் 3 பேரும் நல்ல போர்மில் இருக்கும் போது யாரை T20 போட்டிகளில் அணித்தேர்வில் ஒதுக்கி வைப்பது எனும் கேள்வி வருகையில் தவான் மீது கை நீள்வது போல், ஒருநாள் போட்டிகளில் மிக சிறந்த காம்பினேஷனான குல்தீப்-சஹால் கூட்டணியை இந்தியா ஒருபோதும் பிரிக்ககூடாது.
இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தால் ஒன்றும் ஜோசிக்காமல் ஜடேஜா- சஹால் (குல்தீப் யாதவை தவிர்த்து) கூட்டணியே விளையாட வேண்டும்.
தவான்,ரோஹித், கோஹ்லி, சிரேயாஷ், ராகுல், மனிஷ் பாண்டே ஆகிய இந்தியாவின் முன்கள வீரர்களுக்கு பகுதி நேர பந்து வீச்சு என்றால் என்னவென்று தெரியாது பூம்ரா, சாமி, குல்தீப், சஹால் ஆகியோருக்கு கொஞ்சமும் துடுப்பாட்டம் வராது அதனால் ஜடேஜாவின் தேவை அவசியமானதாகின்றது.
இங்கேதான் சச்சின், சேவாக், யுவி, கங்குலி, ரெயினா போன்ற வீரர்கள் பந்து வீச்சிலும் காட்டிய பங்களிப்பு நினைவுக்கு வந்து போகின்றது ❤
உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?