குல்தீப் சுழலில் திடீர் சரிவை சந்தித்த இங்கிலாந்து..!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தர்மசாலாவில் இன்று (7) நிறைவடைந்தது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 218 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இன்றைய நாள் முடிவில் தமது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அதன்படி, முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட 83 ஓட்டங்களால் இந்தியா பின்தங்கியுள்ளது.

ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 52 ஓட்டங்களையும், சுப்மன் கில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 எடுத்த நிலையில் அவரை சோயப் பஷீர் வெளியேற்றினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இன்னிங்ஸ் 170 ஓட்டங்களாகப் பதிவாகியிருந்த போதிலும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்தது.

இருப்பினும், குல்தீப் யாதவ் எடுத்த 5 விக்கெட்டுகளாலும், 100வது டெஸ்டில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளாலும் சரிந்த இங்கிலாந்து 218 க்கு ஆட்டமிழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் சாக் க்ரோலி இன்னிங்ஸில் அதிகமாக 79 பெற்றார். 100வது டெஸ்டில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 29 ல் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 27 , ஜோ ரூட் 26, பென் ஃபாக்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.