குல்தீப் மீது அஸ்வின் காட்டிய மரியாதை- ரசிகர்கள் நெகிழ்ச்சி…!

 குல்தீப் மீது அஸ்வின் காட்டிய மரியாதை- ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்மசாலா நகரில் துவங்கியது. அதில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸ் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக ஜாக் கிராவ்லி அரை சதமடித்து அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 100/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அவரை சரியான நேரத்தில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் சீரான இடைவெளியில் பென் டக்கெட், ஓலி போப், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் சொற்ப ரன்களில் எடுத்தார்.

வானத்தைப் போல: அதே போல ஜோ ரூட்டை 26 ரன்களில் ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கினார். மீதமிருந்த பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார். பொதுவாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுக்கும் பவுலரின் கையில் பந்தை கொடுத்து சக வீரர்கள் அவரை அணியை பெவிலியனை நோக்கி அழைத்துச் செல்லுமாறு கேட்பது வழக்கமாகும்.

அந்த வகையில் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் அணியை முன்னோக்கி வழிநடத்துவதற்காக பந்தை கையில் வாங்கினார். ஆனால் அப்போது 100வது போட்டியில் களமிறங்கி சாதனை படைத்த தம்முடைய சீனியரான அஸ்வினிடம் பந்தை கொடுத்த குல்தீப் யாதவ் நீங்கள் இந்திய அணியை முன்னோக்கி வழி நடத்துங்கள் என்று மரியாதையுடன் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் அதை ஏற்காத அஸ்வின் நீங்கள் தான் அதற்கு தகுதியானவர் என்று பந்தை குல்தீப் கையில் தூக்கிப் போட்டார். அதை வாங்கிய குல்தீப் மீண்டும் பந்தை அவரிடமே தூக்கி போட்ட போது குறுக்கே வந்த சிராஜ் பிடித்தார். அதன் பின் நீங்கள் 100வது போட்டியில் முன்னோக்கி செல்லுங்கள் என்று அஸ்வின் கையில் சிராஜ் பந்தை கொடுத்தார். அதை வாங்கிய அஸ்வின் மீண்டும் ஏற்காமல் “குல்தீப் தான் இதற்கு தகுதியானவர்” என்று விடாப்படியாக நின்று அவருடைய கையிலேயே பந்தை கொடுத்து விட்டார்.

இறுதியில் சீனியரின் பேச்சைக் கேட்டு பந்தை கையில் வாங்கிய குல்தீப் இந்திய அணியை ரசிகர்களின் பாராட்டுக்கள் மத்தியில் முன்னோக்கி அழைத்துச் சென்றார். அவரை முன்னே விட்டு பின்னால் நடந்து வந்த அஸ்வின் கைதட்டி பாராட்டி ஜாம்பவானுக்கு அடையாளமாக செயல்பட்டார். அதை பார்க்கும் ரசிகர்கள் நெகிழ்ச்சியைடந்து இது தான் பொறாமையே இல்லாத மனசு என அஸ்வின் மற்றும் குல்தீப்பை பாராட்டி வருகிறார்கள்.