கோலியின் இன்றைய ஆட்டம்

  • கோலியின் இன்றைய ஆட்டம் நடை பழகும் ஒரு குழந்தைக்கு அம்மா நடக்க சொல்லித் தருவது போல இருந்தது.

ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தை எப்படிக் கட்டமைக்க வேண்டும், அதை அதற்கு அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்த வேண்டும், பவுண்டரிகள் வராத போது சிங்கிள், டபுள் என ஸ்கோர் போர்டை எப்படி இயங்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழகாக சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

அடித்த 84 ரன்களில் 64 ஓட்டங்கள் வெறும் 1,2 என ஓடிக்கொண்டே இருந்தார், அதுவும் 50 ஓவர்கள் ஃபீல்டிங், அதற்குப் பின் ஏறக்குறைய 40 ஓவர்கள் பேட்டிங் என்பதற்கெல்லாம் உடலளவிலும், மனதளவிலும் அசுர பலம் தேவை. 2000-வது ஆண்டிலிருந்து கணக்கிட்டால், ஒருநாள் போட்டிகளில் அதிக சிங்கிள் எடுத்தவர் கோலிதான் (5868).

அதேபோல் பல மாதங்களுக்குப் பிறகு இந்த தொடரில் தான் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்கிறார். எப்போதும் ஸ்பின்னர்களை முன்னால் வந்து எதிர்கொண்டு அவுட் ஆகிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த கோலி இந்தத் தொடரில் அதை மாற்றி ஸ்பின்னுக்கு பின்னே சென்று ரன்கள் எடுக்கும் தனது பழைய டெக்னிக்கை உயிர் பெறச் செய்து ரன்களை குவித்துக் கொண்டிருக்கிறார்.

இன்று 43 ரன்களுக்கு 2 விக்கெட் விழுந்தபிறகு எங்கு ஆஸி கேமுக்குள் வந்து விடுமோ என எண்ணிய போது அதை அழகாக ஸ்ரேயாஸ் உடன் இணைந்து உடைத்தார்.

ஜம்பா வீசிய ஃபிளைட் பாலில் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் ஒரு ஷாட் அடிப்பார், வெகு நாளைக்குப் பிறகு அந்த பழைய ஃபுட் ஒர்க் லைட்டா எட்டிப் பார்த்தது.

சர்பேட்டா பரம்பரையில் ஆர்யா சிறுவயதில் மற்றவர்கள் பாக்ஸிங் செய்வதைப் பார்த்து தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதாக ஒரு வீடியோ இருக்கும். கோலியின் இன்றைய ஆட்டத்தைப் பார்த்தபோது அந்த ஞாபகம்தான் வந்தது, கோலிக்கும் தன்னுடைய பழைய ஆட்டத்தை ஆட ஆவல் இருக்கிறது. அதை மீண்டும் மீண்டும் அவரே பார்த்து தன்னுடைய பழைய ஆட்டத்தை மீட்டெடுக்க ஆர்யா போலவே தயாராகி கொண்டிருக்கிறார்.

Sequioa என்கின்ற மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது அடுத்தடுத்து தழைக்க நெருப்பு வேண்டும், இதனாலேயே அதனை தாவர உலகின் ஃபீனிக்ஸ் என்று சொல்வதுண்டு! கோலி கிரிக்கெட் கிங்டத்தின் கிங் மட்டுமல்ல, Sequioa-உம் தான். நெருப்பு அதனை உயிர்த்தெழ வைப்பது போல் அழுத்தம் அவரது உத்வேகத்தை வெளிக்கொணர்ந்து விடுகிறது…..

Cometh The Hour, Cometh The Conqueror, Cometh The Chase Master!

#அய்யப்பன்

Previous articleஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வந்தார் தோனி..டிசர்ட் டிசைனில் மறைந்திருக்கும் செய்தி என்ன?
Next articleCT இறுதிப் போட்டியில் இந்தியா..!