ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ ஆட்டம் என்று கருதப்படும் 14வது ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் சென்னை மற்றும் பெங்களூரில் போட்டியிடும் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது, மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி பகல் 3.30 க்கு ஆரம்பிக்க உள்ளது.
ஐபிஎல் இன் ‘எல் கிளாசிகோ’ போட்டி என்று ரசிகர்கள் அதிகமாகவே சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையிலான போட்டியை வர்ணித்து வருவது வழமையானது, ஆனால் 14வது ஐபிஎல் தொடரில் மும்பை அணி தோல்விகளை தொடர்ச்சியாக தழுவி வரும் நிலையில் இம்முறை இந்த El Clasico போட்டிகளுக்கு நிகரான ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் களம்காண போகின்றன.
விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது, இதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னாள் தலைவர் தோனி ,இந்நாள் தலைவர் கோலி ஆகியோர் தலைவர்களாக இருக்கும் அணிகள் என்பதனையும் கடந்து புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் அணிகள் என்ற அடிப்படைகளில் ரசிகர்கள் இதனை பெருவாரியாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கால்பந்தாட்டத்தில் பார்சிலோனா ,ரியல் மாட்ரிட் அணிகள் விளையாடும் எல் கிளசிக்கோ போட்டிக்கு நிகராக இந்தப் போட்டி இருக்கும் என்று சொல்லி வர்ணித்தால் அது ஒன்றும் தவறாகாது.
இரு அணிகளுக்கும் இடையிலான 26 போட்டிகளில் 16 ஆட்டங்களில் சென்னை அணியும் 9 ஆட்டங்களில் பெங்களூர் அணியும் வெற்றி பெற்றுள்ளன. பெங்களூர் அணி சென்னைக்கு எதிராக அதிகபட்சமாக 208 ஓட்டங்களை குவித்துள்ளது,சென்னை அணி பெங்களூர் அணிக்கு எதிராக 206 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்துள்ளது.