சங்கக்காரவின் ராஜஸ்தான் அணிக்கு திரில்லிங் வெற்றியை பரிசளித்த 20 வயதான தியாகி – மீண்டுமொரு பரிதாப தோல்வி பஞ்சாப் வசம்..!

ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டியில் ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 186 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணியின் ஓப்பனிங் ஜோடியான வெஸ்ட் இண்டீஸின் எவின் லீவிஸ் – ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தனர். லீவிஸ் 36 ரன்களுக்கு அவுட்டானார். அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்கள், லிவிங்ஸ்டன் 25 ரன்களுக்கு வந்த வேகத்தில் வெளியேறினர்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் – மஹிபால் லாம்ரார் மிரட்டினர்.

சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் 49 ரன்களுக்கு வெளியேறினார். லாம்ரார், தீபாக் ஹூடாவின் ஒரே ஓவரில் பெற்ற 24 ரன்களுடன்  43 ரன்களுக்கு வெளியேறினார்.

16 ஓவர்களில் 165 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த அந்த அணி இறுதி 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே பெற்றுக்கொண்டது, இதனால் 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களும், முகமது ஷமி 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி யில் தொடக்க ஜோடி முதலில் நிதானமாக விளையாடினர். பின்னர் வேகமெடுத்த அந்த அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 120 ரன்களை சேர்த்தது.

அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 49 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்த சில பந்துகளில் மயங்க் அகர்வால் 67 ரன்களுக்கு வெளியேறினார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் அணியை வெற்றி நோக்கி வழிநடத்தினர்.

ஒரு கட்டத்தில் 15 பந்துகளுக்கு 10 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது, அதுவும் இறுதி இரண்டு ஓவர்களில் அவர்களுடைய வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைபட்டது.

19-வது ஓவரை வீசிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் சிக்கனமாக 4 ரன்களை விட்டுக் கொடுத்தார், இறுதி ஓவரில் 4 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை இருந்த போதுதான் போட்டியில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.

20 வயதான கார்த்திக் தியாகியின் இறுதி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்து டாட் ஆனது. 2வது பந்தில் மர்க்ராம் ஒரு ரன் அடித்தார். 3வது பந்தில் சிறப்பாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை பறித்தார்.

இதனால் கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இதன் பின்னர் 4 வது பந்தும் டாட் ஆனது. 5வது பந்தில் தீபக் ஹூடா டக் அவுட்டாகி வெளியேறினார்.

கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது  பாவியன் அலனுக்கு எதிராக அதுவும் டாட் ஆனது. இதனால் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார் கார்த்திக் தியாகி.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 183 ரன்களை எடுத்தது. இந்த போட்டியிலும் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததால் இந்த சீசனில் தனது 6வது தோல்வியை பதிவு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

இவ்விரு அணிகளும், இந்த சீசனில் முதல் பாதியில் மோதிய போட்டியை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், 221 ரன்கள் குவிக்க, ராஜஸ்தான் அணியில் தனி ஆளாக போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது ராஜஸ்தான்.

அன்று எப்படி ராஜஸ்தான் வெற்றி பெற வேண்டிய போட்டியை, இளம் வீரர் ஆர்ஷ்தீப் சிங் இறுதி ஓவரில் மிகச் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தாரோ, அதே போன்று பஞ்சாப்புக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இன்றைய நாளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடைய இளம் வீரர் தியாகி மிக அற்புதமாக இறுதிவரை வீசி ராஜஸ்தானுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

ஆக மொத்தத்தில் இந்த ஐபிஎல் பருவகாலத்தில் ராஜஸ்தான் ,பஞ்சாப் அணிகள் மோதிய இரண்டு ஆட்டங்களும் இறுதிவரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து உள்ளது எனலாம்.