சங்கா எனப்படும் மனிதநேயப் பண்பாளன் ❤️

சங்கா!

கிரிக்கெட்டில் தன் அணிக்காக ஆடும் விதத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட ஒரு துறவி டிராவிட்.

ஆனால் இதில் சங்கா ஒரு பொறுப்பான குடும்பத் தலைவன்.

தன்னிடமிருக்கும் எல்லா அடிவகைகளையும் சூழல் சற்று சரியில்லாத போதும் எதிரணி மீது இறக்கிவிடுகின்ற ஒரு துடிப்பும், அதற்கு வருகின்ற எதிர்வினையைச் சமாளிக்கின்ற திறனும் கொண்ட பேட்ஸ்மேன்.

நான் இந்திய கிரிக்கெட் அணி இரசிகனாக இருந்த போது, சாணை இல்லாத அருவாளால் மொத் மொத் என்று கருவேலமரத்தை வெட்டியதுபோல் காட்டடி அடித்த ஜெயசூர்யாவால் அதிக மனஉளைச்சலுக்கு உள்ளானதில்லை. பெண்களின் செல்ல அடியைப் போல் நளினமாய் வலிக்காது பந்தை தட்டி மைதானத்தில் உருண்டும், பறந்தும் எல்லைக்கோட்டிற்குப் போக வைத்த சங்காவால்தான் அதிக மனஉளைச்சல் அடைந்திருக்கிறேன்.

over the wicket-ல் இருந்து வலக்கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்லீப் பீல்டர்களை எச்சரிக்கை செய்து கொஞ்சம் வெளிய வீச, பீல்டர்களுக்கு தகுந்தாற் போல் இடையில் தன் batடால் பந்திற்கு பவுண்டரிக்கு வழிக்காட்டும் அந்த இலாவகம் நளினம் பாலே நடனத்தை ஒத்தது. ஒரு மில்லிமீட்டர் கூட தேவைக்கு அதிகமாய் bat அசையாது!

கங்குலி பந்திற்கு இறங்கினால் பெரும்பாலும் பந்து மக்கள் கூட்டத்தில்தான் கிடக்கும். அது ஓரிரு நொடித்துயரம் எதிரணி இரசிகனுக்கு. ஆனால் சங்கா இறங்கினால் பந்து காற்றில் மைதானத்தில்தான் இருக்கும் ஆனால் பீல்டர்களுக்கு இடைவெளியில் இருக்கும். சங்காவால் நான் தோனி வரை “அங்க ஒரு பீல்டர வைக்க என்ன பிரச்சினை இவனுக்கு?!” என்று திட்டியிருக்கிறேன். சங்காவின் கவர் டிரைவை போலவே, பந்தின் லைனுக்கு இறங்கிவந்து அவர் ஆடும் விதமும் அவ்வளவு துல்லியமாக இருக்கும்.

அளவாய் உடலைத் திருப்பி பந்தை தட்டுவதற்கும் அடிப்பதற்கும் இடையில் ஆடும் pull ஷாட். Good-full length இடையில் cut அடிக்க போய் கீப்பரிடம் கேட்ச்சாக off-side கொஞ்சம் வெளியே வீசும் சுழற்பந்தை தவறாமல் cut ஆடும் டைமிங், அந்த foot வொர்க், fine legல் ஆடும் மினி ஸ்வீப், கிராஸ் batல் குட்லென்த்தில் பட்டு வரும் பந்தை மிட்ஆன் மேல் பவுண்டரி ஆடுவது, leg flicks என ஒரு கம்ப்ளீட் பேட்ஸ்மேன் சங்கா.

சங்கா பேட்டிங் சாதனைகள் சங்காவின் விக்கெட் கீப்பிங் சாதனைகள்னு நீங்க கூகுள் பண்ணாவே வந்துரும் அதனால நான் இங்க அதையெல்லாம் எழுதப்போறதில்லை.

12,400 ரன்களை டெஸ்டில் குவித்து சச்சினுக்குச் சமமாய் பேசக்கூடிய இடத்திலிருந்த சங்கா தன்னை மாறிவரும் கிரிக்கெட்டிற்கு ஏற்றார் போலவும் தகவமைத்துக்கொண்டார். அதேசமயத்தில் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் என்கிற நெருக்கடியோடு, விக்கெட் கீப்பர் சுமையையும் தாங்கியதோடு, அணித்தலைவராகவும் இருந்து இரண்டு பெரிய icc உலகக்கோப்பை இறுதியாட்டத்திற்கு அணியை வழிநடத்தி சென்றிருக்கிறார்.

2009ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி இறுதியாட்டத்தில் 64 ரன்களை சங்கா எடுத்திருந்தும் மற்ற வீரர்களின் பெரிய பேட்டிங் ஒத்துழைப்பு இல்லாததால் பாகிஸ்தானிடம் தோற்கிறது இலங்கை.

ஆனால் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி 2014ல் இருபது ஓவர் உலகக்கோப்பை இறுதியாட்டத்திற்குச் செல்ல, இந்தியாவிற்கு எதிரான அப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 52 ரன்களை எடுத்து கோப்பையைப் பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதும் பெறுகிறார்.

“எல்லா நேரங்களிலும் வீழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கமாட்டோம். வீழ்ச்சிக்குப் பிறகும் எழுந்து போராடினால் வெற்றி கிடைக்கும்” என்கிற சங்காவின் வார்த்தைகளுக்குச் சங்காவே உதாரணம்.

இன,மத, மொழி பிரிவினைகள், இனக்கலவரங்கள், உள்நாட்டு யுத்தமென மக்கள் கலைந்து கிடந்த ஒரு நாட்டில், எல்லோருக்கும் பிடித்த ஒரு மனிதராய் ஒரு பிரபலம் இருக்கிறாரென்றால், அவர் தனிப்பட்ட ஒழுக்கமுடையவராக, நேர்மையுடையவராக, அதிகாரவர்க்கத்திற்குக் கட்டுப்படாதவராக, மனிதநேயமிக்கவராக இருந்தால்தான் முடியும்.

பிரிட்டிஷ் விட்டுப்போய் சுதந்திரம் பெற்ற இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சரித்திரம் கருப்பு சூலை எனப்படும் தமிழர்கள் மீதான சிங்களர்களின் இனவெறி வன்முறையாட்டங்கள்தான். அப்படிப்பட்ட நேரத்தில் தைரியமாகச் சங்காவின் பெற்றோர்கள் தமிழர்களுக்கு உதவிப்புரிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இதய ஈரமுடையவர்களின் சிறந்த வளர்ப்பு பின்னாட்களில் சங்காவை மனித வாழ்க்கைப் பற்றிய புரிதல் மிக்கவராகவும், மனிதநேயவாதியாகவும் தயாரித்திருக்கிறது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீதான வன்முறைகளுக்கு “பிள்ளைகளுக்கு உண்மையான வரலாற்றைச் சொல்லிக்கொடுங்கள். புனிதப் படுத்தப்பட்டதைச் சொல்லித்தராதிர்கள். கல்வி இப்படித்தான் இருக்க வேண்டும்” என்கிறார் சங்கா.

எவ்வளவு ஆழமான வார்த்தைகள்!

மேலும் இலங்கைப் பெரும் பொருளாதாரத் தள்ளாட்டத்தில் இருக்க 2020ல் நாற்பது மில்லியன் கடன் வாங்கி ஒரு பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவிருப்பதாக இராஜபக்சே சொல்ல பெரிய அதிருப்தி எதிர்ப்பு உருவாகிறது. கிரிக்கெட்டர்கள் மத்தியிலும் அதிலொருவர் சங்கா.

பின்பு இராஜபக்சே அழைப்பில் இதுசம்பந்தமான ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சங்கா “இந்தப் பணத்தை மாணவர்களின் கல்விக்காகவும், கிரிக்கெட் அபிவிருத்திக்காவும் செலவிடுவதே சரி. வடக்கு கிழக்கில் போருக்குப் பின்னான புரணமைப்புகளைச் செய்ய தவறி விட்டோம். அங்கு திறமையானவர்கள் இருக்கிறார்கள். அங்கு வசதிகளைச் செய்து தருவதின் மூலம் திறமைகளை எடுத்துக் கொள்ள முடியும்” என்று அறிவுப்பூர்வமாகவும் தைரியமாகவும் மனிதாபிமானத்தோடும் பேசியிருந்தார். பின்பு இத்திட்டம் கைவிடப்பட்டது.

சங்கா எப்படி முழுமையான கிரிக்கெட் வீரரோ அப்படி முழுமையான மனிதரும் கூட. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நோக்கமே சங்காவின் கிரிக்கெட் திறனை மட்டுமே பேசவேண்டும் என்றில்லாமல் அவரின் நற்குணவியல்புகளையும் சேர்த்தே பேசவேண்டும் என்பதற்கும்தான்.

சங்கா எப்படிப்பட்டவராக வாழ்கிறார் என்பதிற்கான உதாரணத்தையும் சங்கா கூறியதிலிருந்தே சொல்வது சரியாய் இருக்கும்.

“வெவ்வேறு இனங்கள், ஜாதிகள், மற்றும் மதங்களைச் சேர்ந்த ரசிகர்கள் ஒரு பொதுவான தேசிய நோக்கத்திற்காக ஒன்றிணைந்து தங்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் என் அடித்தளம், அவர்கள் என் குடும்பம். அவர்களுக்காக எனது கிரிக்கெட்டை விளையாடுவேன். அவர்களின் ஆன்மாதான் கிரிக்கெட்டின் உண்மையான ஜீவன். என்னோடு சேர்த்து என் மக்கள் அனைவருமே. நான் தமிழன்.. சிங்களன்.. முஸ்லிம் மற்றும் பர்கர். நான் ஒரு பௌத்தன், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவன். நான் இன்றும் எப்பொழுதும் பெருமையுடன் சொல்வேன் இலங்கையரென…!”

விளையாட்டு மக்களை ஒருங்கிணைத்தால் ஒரு மனிதமுள்ள நேர்மையான விளையாட்டு வீரன் அந்தப் பிணைப்பை பன்மடங்கு இறுக்குகிறான். சங்காவின் கைகளில் இருந்த மட்டைக்கு புறாவின் சாயல்❤️!

#Richards