சங்கா எனும் சாதனை நாயகன் – ஹெப்பி பேர்த்டே தலைவா..!

ஹேட்டர்ஸ் இல்லாத கிரிக்கெட் வீரரொருவரின் பெயரைச் சொல்லுமாறு கேட்டால் பலர் “சங்கா” என்பார்கள். “சங்கா” என்று சொல்லும்போதே மனதில் கொண்டாட்டம். சங்கா பற்றி எழுதும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.

1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியிலிருந்த சிரேஷ்ட வீரர்கள் ரணதுங்க, குறுசிங்க ஓய்வின் பின்னர், கிரிக்கெட் வரலாற்றில் அழியாப் புகழ் பெறப்போகும் இரு இளைஞர்கள் இலங்கையணிக்கு உள்வாங்கப்படுகிறார்கள். மஹேல, சங்கா.

சச்சினை கிரிக்கெட் கடவுளென்று கருதியவர்களெல்லாம், பிற்காலத்தில் சச்சினுக்கு போட்டியாக; சச்சினை விஞ்சும் வகையில் ஒருவன் வருவானென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2000ம் ஆண்டு ஜூலை மாதம் அவன் அறிமுகமாகிறான்.

புன்னகை முகம், நிதானமான துடுப்பாட்டம், நேர்த்தியான ஷாட்ஸ், ஏராளமான சாதனைகள் என்று கிரிக்கெட்டின் தலை சிறந்த வீரரானார். களத்திலும், களத்திற்கு வெளியிலும் கடைப்பிடிக்கும் கண்ணியம்தான் சங்கா இவ்வளவு தூரம் உயரக் காரணமாய் அமைந்தது. இலங்கை அணியை பிடிக்காதவர்களைக் கூட இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கச் செய்தார். பலருக்கு கிரிக்கெட் மேல் அடங்காக் காதலை உண்டாக்கிய ‘கிரிக்கெட்டின் கியூபிட்’ சங்கா. சங்காவின் காலத்தில் கிரிக்கெட் பார்த்தேன் என்று மார்தட்டிக் கொள்வோர் ஏராளமானோர்!

2015 உலகக்கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாகக் குவித்த நான்கு சதங்கள், சங்கா மஹேல பெற்ற 624 ரன்கள் இணைப்பாட்டம், டெஸ்ட் போட்டிகளில் குவித்த இரட்டைச் சதங்கள் என்று நீளும் சங்காவின் எல்லா சாதனைகளும் ஒவ்வொரு ரசிகனுக்கும் மனப்பாடம்.

2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோனி, யுவ்ராஜ் வெற்றியை கட்டியணைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, பின்னால் புன்னகையுடன் நடந்துவரும் சங்காவின் முகத்தை எந்தவொரு கிரிக்கெட் ரசிகனும் மறந்துபோக மாட்டான். சங்காவின் இறுதி ஒருநாள் போட்டியில் வருண பகவான் கண்ணீர் விட்டது தற்செயல் நிகழ்வென்று கடந்து போகமுடியாத நிலை. சங்காவின் ஓய்வுக்கு யார்தான் கவலையுற மாட்டார்கள்!

கிரிக்கெட் வீரனொருவன் பெறக் கூடிய உச்சக்கட்ட மரியாதை என்னவென்றால் ஓய்வு பெற்ற பின்னர், “கடவுளே! இவர் மீண்டும் களமிறங்க வேண்டும்” என்று ரசிகர்கள் அங்கலாய்ப்பது. அது சங்காவுக்கு மாத்திரம் கிடைத்த வரம்! தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட போர்மில் இருக்கும்போது ஓய்வு பெறும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது. சங்காவின் கவர் ட்ரைவை மீண்டும் பார்க்க மாட்டோமா? என்று ஏங்கித்தவிக்கும் ரசிகர்கள் ஏராளம். சங்காவின் கையில் தவழ்வதற்காக துடுப்பும் ஏங்கித்தவிக்கக் கூடும்!

இரண்டு வருடங்கள் மேலதிகமாக விளையாடியிருந்தால் பல சாதனைகளின் பட்டியலில் சங்காவின் பெயரே முதலிடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும். சச்சின், பிரட்மனின் பல சாதனைகளை ‘எங்கே காணவில்லை?’ என்று தேடும் நிலை தோன்றியிருக்கும். பிரட்மன், சச்சினை விட சங்கா ஒருபடி மேல்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக சங்கா படைத்த சாதனைகள் எல்லோரும் அறிந்ததே! கிரிக்கெட்டின் தாயகத்தில் சங்காவிற்குக் கிடைக்கும் அளவில்லா மரியாதையும், கெளரவமும் ‘சங்கா யார்?’ என்பதற்குப் பதில்.

கிரிக்கெட் வீரனென்பதைத் தாண்டி மனிதநேயம் கொண்ட மனிதனாய் சங்காவைக் காதலிப்போர் அதிகம். இன மத பேதம் தவிர்த்த நற்பண்பாலனுக்குப் பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.❤

#நன்றி _இணையம்