சங்கா vs சச்சின் _ ஓர் ஒப்பீடு…!

சச்சினை பேசும்போது லாரா, பாண்டிங், காலிஸ் என்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். அதேபோல் 21-ஆம் நூற்றாண்டின் கிரிக்கெட்டை பேசும் போதும் சச்சின், தோனி, டிவிலியர்ஸ், விராட், ஸ்மித், ரூட் வில்லியம்சன் என்றே பேசி ஒரு மகத்தான கிரிக்கெட் வீரரை வசதியாக மறந்து விடுகிறோம்.

அவருடைய டெஸ்ட் ரன்கள் 12,400 சராசரி 57.40
அவருடைய Odi ரன்கள் 14,234
சராசரி 41.98
அவருடைய பர்ஸ்கிளாஸ் போட்டி ரன்கள்
20,911 சராசரி 52.40
அவருடைய சர்வதேச அரைசதங்கள் 153
அவருடைய சர்வதேச சதங்கள் 63

அவர்தான் 21ம் நூற்றாண்டின் த கிரேட் பேட்ஸ்மேன் குமார் சங்கக்கரா!

 

ஒருவரைச் சிறந்தவர் என்று அறிய இன்னொரு சிறப்பானவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எப்போதும் வழமையானதாகவும் அவசியமானதாகவே இருக்கிறது. இந்த அடிப்படையில் சங்கா அறிமுகமாகி சச்சின் ஓய்வுப்பெறும் வரை இருவரும் எவ்வளவு ரன்களை சதங்களை அரைசதங்களை அடித்துள்ளார்கள் என்று ஒப்பிட்டு பார்ப்பதின் மூலம் சங்காவின் திறமையின் உயரத்தை, பேட்டிங் தரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

சங்கா அறிமுகமான 2000ஆம் ஆண்டிலிருந்து சச்சின் odiல் ஓய்வை அறிவித்த 2012 வரை……
சச்சின் 250 போட்டிகளில் 9855ரன்களும் 25சதங்களும், 52 அரைசதங்களையும் அடித்திருந்தார்.
சங்கா 337 போட்டிகளில் 10,915 ரன்களும் 14 சதங்களும் 73 அரைசதங்களையும் அடித்திருந்தார்.

இதில் இன்னொரு சிறப்பான விசயம் என்னவென்றால் சங்கா அடுத்து மூன்று ஆண்டுகள் odiல் ஆடி 2015ல் ஓய்வுபெறும்போது 67 போட்டிகளில் 3319ரன்களையும் 11 சதங்களையும் 20அரைசதங்களையும் அடித்திருந்ததுதான். இந்த ஆண்டுகளில்தான் அவருடைய அதிகபட்ச odi ஸ்கோர் 169 பதிவானது.

இதிலும் விடைப்பெற்ற 2015ஆம் ஆண்டில் மட்டும் அவர் 13ஆட்டங்களில் ஆடி 862 ரன்களையும் 5 சதங்களையும் 2 அரைசதங்களையும் தன் அதிகபட்ச 86.20 ஆவ்ரேஜில் அடித்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 2000ம் ஆண்டிலிருந்து,
சச்சின் 131 போட்டிகளில் 10,080 ரன்களையும் 29 சதங்களையும் 45அரைசதங்களையும் அடித்திருந்தார்.
சங்கா 115 போட்டிகளில் 10,045 ரன்களையும் 30சதங்களையும் 41அரைசதங்களையும் அடித்திருந்தார்.

இதில் விடைபெறுவதற்கு முன் மூன்றாண்டுகளில் 19 போட்டிகளில் 2335 ரன்களையும் 8 சதங்களையும், 11 அரைசதங்களையும் அடித்திருந்தார். Odi போலவே கடைசி மூன்றாண்டுகளில்தான் அவரது டெஸ்ட் அதிகபட்சமான 319ரன்கள் பதிவானது. இந்த மூன்றாண்டுகளில்தான் அவரது 11 200+ சதங்களில் இரண்டு பதிவானது. ஒய்வுப்பெற்ற வருடம் அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 41. மொத்த சராசரி 57!

சாமான்ய கிரிக்கெட் பைத்தியமாய் தொலைக்காட்சி பெட்டிமுன் தவம் கிடந்த நாட்களில் விராட்கோலி போல் சீராக ரன் அடித்து நான் பார்த்த பேட்ஸ்மேன் சங்கா. என்னவொன்று விராட் ஆடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாகவும், சங்கா ஆடுவதைப் பார்க்க வருத்தமாகவும் இருக்கும். அவரது அசால்டான கவர் டிரைவ்களில் இதயம் நொறுங்கும். உடற்சக்தி செலவில்லாது அவர் ஆடும் leg flick ஷாட்களால் அதிர்ச்சியாகிக் கண்களை மூடிக்கொள்வேன். சுழற்பந்தில் அவர் ஆடும் கட் ஷாட்கள் என் கண்களுக்கு அவர் செய்யும் துரோகம் போன்று இருக்கும். ஆம் dot ball என்று கண்களை நம்ப வைத்து கல்லியில் தெறிக்க விடுவார். இத்தனை மனஉளைச்சலை அவரால் நான் அடைந்ததிற்குக் காரணம் அப்போது நான் இந்திய கிரிக்கெட் அணி இரசிகன். சச்சினின் தீவிர பக்தன். இந்தக் காரணங்களால் அந்த அற்புதமான இடக்கை ஆட்டக்காரர்களுக்கே உரிய நளினமான சங்காவின் ஆட்டத்தை இரசிக்க தவறிவிட்டேன்!

முதலில் சங்கா எவ்வளவு தரமான பெரிய பேட்ஸ்மேன் என்று தெரியப்படுத்த சில புள்ளி விபரங்களோடு பேட்டிங் தொழிற்நுட்ப பேராசியர் சச்சினோடு ஒப்பிட்டுக் காட்டினேன். அவரது ஆட்ட சிறப்புகள், சிறப்பான ஆட்டங்கள் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்!

Richards