சச்சின் ஒரு லட்சம் ரன்கள் அடித்திருப்பார்- அக்தார் புகழாரம்..!

சச்சின் ஒரு லட்சம் ரன்கள் அடித்திருப்பார்- அக்தார் புகழாரம்..!

தற்போதைய விதிமுறைகள் இருந்திருந்தால் சச்சின் ஒரு இலட்சம் ரன்களை அடித்திருப்பார் என்று மூன்று ரிவியூக்கள் வழங்கும் முறையை வைத்து பேசியிருக்கிறார் அக்தர். மேலும் அவர் சச்சின் அவர் சகாப்தத்தின் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஒரு இலட்சம் ரன்களென்று அக்தர் தான் சொல்ல வந்த விசயத்திலுள்ள உண்மையை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு கூறுகிறார். ஆனால் சச்சின் குறைந்தது கொஞ்சம் கூடுதலாக ரன்களையும் சதங்களையும் அடித்திருப்பார் என்பது உண்மைதான்.

இதில் நாம் தற்போதைய ரிவியூ முறை, சச்சினின் சகாப்தத்தில் சந்தித்த பந்துவீச்சாளர்களின் தரம் இவற்றோடு அப்போதும் இப்போதும் ஒருநாள் போட்டிகளுக்கு இருக்கிற “பவர் ப்ளே” எனப்படுகிற பீல்டிங் விதிமுறைகளையும் எடுத்துவைத்துப் பார்க்க வேண்டியது முக்கியம்.

ஒருநாள் போட்டிகளுக்கு முதன் முதலில் 1992ல்தான் உள்வட்டத்திற்கு உள்ளே வெளியே எந்தெந்த ஓவர்களில் எத்தனை பீல்டர்களென விதிகள் வகுக்கப்பட்டு, முதல் 15 ஓவர்களுக்கு வெளியே 2 பீல்டர்கள் எனவும், அடுத்த 35 ஓவர்களுக்கு அதிகபட்சமாக 5 பீல்டர்களை வெளியே பயன்படுத்திக்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டது.

இதற்கடுத்து பவர்ப்ளே முறையில் 2005, 2008, 2011, 2012 ஆண்டுகளில் icc மாற்றத்தைக் கொண்டுவந்திருந்தாலும். 35 ஓவர்கள் தொடர்ச்சியாய் உள்வட்டத்திற்கு வெளியே 5 பீல்டர்களை பயன்படுத்திக்கொள்ளும் விதி இல்லை. தற்போது கூட 41-50 ஓவர்களில்தான் வெளியே 5 பீல்டர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆட்டத்தின் மத்திம ஓவர்களில் உள்வட்டத்திற்கு வெளியே 5 பீல்டர்களை வைத்துக்கொண்டு பவுண்டரி தேடிச் சாதிப்பது எளிதான காரியமில்லை. ஒரு ரன் இரண்டு ரன் என்று பொறுக்கித்தான் ஓடி ஓடி எடுக்க வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் ரன் நெருக்கடி தந்தால் இன்னொரு பந்துவீச்சாளரை அடிக்க போகும்போது அதீத கவனமும் பேட்டிங் திறனும் இருக்க வேண்டும். இல்லையென்றால் விக்கெட்டை விட்டுத்தந்துவிட்டு நேராக ஓய்வறைதான்.

சச்சின் சந்தித்த பந்துவீச்சாளர்களையும் இந்த இடத்தில் பார்ப்பது அவர் அடித்த ரன்களின் மதிப்பை மேலும் கூட்டுவதாய் இருக்கும். அவர் தன் கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கியதே உலகத்தரமான வேகப்பந்துவீச்சு புயல்கள் வாசிம்-வக்காரின் ஸ்விங்-வேகத்திற்கு எதிராகத்தான். அப்படியே டொனால்டு-பொல்லாக், மால்கம்-ப்ரேசர், வால்ஷ்-அம்ப்ரோஸ், மெக்ராத்-கில்லஸ்பி-பிரட்லீ என்று அந்த காலக்கட்டத்தில் விளையாடி அடுத்து ஆண்டர்சன்-பிராட்-பிளின்டாப், ஜான்சன்-ஸ்டார்க், ஸ்டெயின்-பிலாந்தர், அக்தர்-ஆசீப்-உமர்குல், வாஸ் என ஒரு பெரிய வேகப்பந்து வீச்சு பட்டாளங்களோடு தொடர்ந்து பேட்டிங் யுத்தம் நடத்திதான் ரன் சேர்க்க வேண்டியதாய் இருந்தது.

பந்துவீச்சுத் துறையில் இந்தப்புறம் சுழற்பந்துவீச்சுத் துறையில் அவர் சந்தித்தவர்களைப் பார்த்தால் ஆயிரக்கணக்கில் சர்வதேச விக்கெட்டுகளை அள்ளிய வார்னே-முரளி அடுத்து சக்லைன்-முஷ்டாக் அகமது-வெட்டேரி போன்ற ஆட்டத்தின் பெரிய திருப்புமுனை சுழலர்கள்.

கடுமையான பீல்டிங் நெருக்கடியில், தரமான பவுலர்களை எதிர்கொண்டு, அம்பயர் அவுட் என்றால் நடையைக்கட்ட வேண்டிய சூழலில்தான் சச்சின் ஒவ்வொரு ஆயிரம் ரன்களையும், ஒவ்வொரு பத்து சதங்களையும் பெரும்பாலும் கடந்து வந்திருக்கிறார். இதில் அவருக்குச் சரியான ஒத்துழைப்பு அணியிலிருந்து தொடர்ச்சியாகக் கிடைக்காதிருந்தும் சலிப்படையாமல் ஆடியிருக்கிறார். இதுதான் அவர் கடினமான பந்துவீச்சாளர்களை சந்தித்ததை விடக் கடினமானது. இதற்கு அதிகபட்ச சுயஉந்துதலும் மனஉறுதியும் வேண்டும்.

ஒருநாள் போட்டிகளில் பவர்ப்ளே முறையை icc கொண்டுவந்த 1992ல் இருந்து, அதில் முதல் விதி திருத்தலைச் செய்த 2005ஆம் ஆண்டிற்கு இடையேயான 14 ஆண்டுகளில் 314 போட்டிகளில் 65 அரைசதங்கள் 38 சதங்களோடு 13,253 ரன்களை அடித்திருக்கிறார்.

இந்த 14 ஆண்டுகளில் 1998ல்தான் ஒரே ஆண்டில் அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன்களான 1894ரன்களை குவித்தார். இதே ஆண்டில்தான் ஒரே ஆண்டில் அதிகபட்சமாக 9 சதங்களையும் அடித்தார்!

பவுன்சர் பந்துகளுக்கு எதிராக அவர் ஆடும் pull-shotற்கு கால்கள் திரும்பி மொத்த உடலும் தயாராகும் வேகம் சொல்லும் அவர் பிறவி கிரிக்கெட்டர் என்று. அது அசாத்தியமான முறை அடிக்கடி மனிதப்பிறப்பில் கைக்கூட வாய்ப்பற்றது. பேபி ABDயை பார்க்கலாம் ஆனால் பேபி சச்சினைப் பார்ப்பது என்னளவில் வாய்ப்பில்லாத ஒன்றே. வேண்டுமென்றால் சச்சின் என்று பெயர் வைத்துக்கொள்ளலாம்!

?Richard