இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய மற்றும் இலங்கை நட்சத்திர வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் ஆகிய இருவருக்கும் “ஸ்போர்ட்ஸ் ஐகொன்” (Sports Icon) விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற 2022 மாலைதீவு விளையாட்டு விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் தலைமையில் இடம்பெற்றது
இவ்விருது வழங்கும் விழாவில் உலகளாவிய ரீதியில் இருந்து பல நட்சத்திர வீரர்கள் மற்றும் வெளிநாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டின் மூலம் நேர்மறையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக சனத் ஜயசூரியவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதேவேளை, இலங்கையின் நட்சத்திர வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கமும் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
“இந்த விருதுக்கு சனத் ஜயசூரியவுடன் உலகின் முன்னணி கால்பந்து கழகங்களில் ஒன்றான ரியல் மெட்ரிட் வீரர் ரொபர்டோ கார்லோஸ், ஜமைக்காவின் நட்சத்திர குறுந்தூர வீரர் அசாபா பவல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் நெதர்லாந்து கால்பந்து ஜாம்பவான் எட்கர் டாவிட்ஸ் உட்பட 16 சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்”