மூதூரின் புகழினை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் சென்ற மண்ணின் மைந்தன், தேசிய நடுவர் சிஹான் சுஹூட்.
இலங்கை கிரிக்கட் வரலாற்றில் முதன் முதலாக இங்கிலாந்து கவுன்டி கிரிக்கட்டின் (பிராந்திய) புகழ்பெற்ற பிராந்திய கிரிக்கட்டான மஞ்செஸ்டர் கிரிக்கட் லீக்கிற்கு 2022 பருவகால கிரிக்கட் தொடருக்கு இங்கிலாந்து கிரிக்கட் சபையின் அங்கீகாரம் பெற்று நான்கு மாத ஒப்பந்த அடிப்படையில் நடுவர் பணியினை மேற்கொள்ள மூதூரை சேர்ந்த சிஹான் சுஹூட் நேற்று 28.07.2022 ம் திகதி இங்கிலாந்தின் மஞ்செஸ்டருக்கு பயணமானார்.
மறைந்த முன்னாள் அதிபரும், ஆங்கில ஆசிரியருமாகிய முஹம்மது இப்றாஹிம் யுபுனு சுஹுத் மற்றும் மசாஹினா சுஹுத் ஆகியோரின் மூன்றாவது மகனான சிஹான் சுஹுத் அவர்கள் மூதூர் மத்திய கல்லூரி, திருமலை இந்துக் கல்லூரி மற்றும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரிகளின் பழைய மாணவராவார்.
2016 ம் ஆண்டில் ஶ்ரீ லங்கா கிரிக்கட்டினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட நடுவர் போட்டிப் பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் சித்தி பெற்று மூதூரின் முதலாவது இலங்கை கிரிக்கட் நடுவராக மூதூர் பெயரினை நாடறியச் செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூதூரின் கடின பந்து கிரிக்கட் வளர்ச்சிக்கு முறையான திட்டங்கள் பல வகுத்து மூதூர் வெஸ்டர்ன் வோறியஸ் எனும் தெரிவு அணியினை உருவாக்கி மாவட்ட மட்டத்தில் பலமான அணியாக அதனை வளர்த்து பின்னர் மூதூரில் பல முன்னனி கடின பபந்து கிரிக்கட் கழகங்கள் தோற்றம் பெற காரணமாக இருந்தார்.
மேலும் பாடசாலை மட்டத்திலான கிரிக்கட்டினை மூதூரில் அறிமுகப்படுத்தும் தொலை நோக்குடன் மூதூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் அல் ஹாஜ்.A.H. பசீர் சேரின் தலைமையில் 19 வயதுக்குற்பட்ட அணியினை உருவாக்கி,பயிற்றுவித்து வழிநடாத்தி மாகாண மட்டம் வரை அவ்வணியை கொண்டு சென்று மூதூர் வலய மட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக மூதூர் மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை படைப்பதற்கு உந்து சக்தியாக விளங்கினார்.
மேலும் தனது நடுவர் துறையானது தன்னுடன் மாத்திரம் நின்றுவிடாமல் மூதூர், திருமலை மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலோங்கச்செய்து பல புதிய நடுவர்களை பயிற்றுவித்து 2019 இல் இடம்பெற்ற இலங்கை நடுவர்கள் (ACUSL) சங்க பரீட்சையில் மூதூரை சேர்ந்த சிறந்த கிரிகட் வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் 14 பேர் ஒரே தடவையில் சித்தி பெற்று மூதூருக்கான வரலாற்று சாதனையாக பதிவு செய்தார் மூதூர் மண் ஈன்றெடுத்த மைந்தன் சிஹான் சுஹூட் அவர்கள்.
மூதூர் மத்திய கல்லூரியின் முழு நேர கிரிக்கட் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சிஹான் சுகூத் அவர்கள் திருமலை ரத்னஜோதி வித்யார்த்தன கல்லூரியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார்.
கிழக்கு மாகாண பாடசாலை மட்ட 19 வயதுக்குற்பட்ட கிழக்கின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இரட்டை சதத்தினை பதிவு செய்து சாதனை நிகழ்த்திய மூதூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை வீரர் உனைஸ் முஹமட் நுபைல் என்பவரின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
மேலும் 2020 ம் காலப்பகுதியில் இலங்கை கிரிக்கட்டினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான ப்ரோமோசன் பரீட்சை மற்றும் வைவாவில் மெரிட் அடிப்படையில் சித்திபெற்று கிழக்கு மாகாணத்தின் சாதனையாளராக திகழ்ந்தார் சிஹான் சுஹுட் அவர்கள்.
இவ்வாறாக கிரிகட் துறையில் எண்ணற்ற அறிவும்,ஆளுமையும் மற்றும் அனுபவமும் கொண்டு தனது அயராத முயற்சியாலும், அபரீத திறமையாலும் இறைவனின் உதவியோடும், குடும்பம்,நண்பர்களின் ஒத்துழைப்போடும் மூதூரின் புகழை சர்வதேசத்திற்கு அறியச் செய்து தனது சர்வதேச நடுவர் கனவின் முதற் படியில் கால் பதித்து தனது பயணத்தை ஆரம்பித்திருக்கும் மூதூர் மண்ணின் மைந்தன் Zihan Suhood அவர்களின் இந்த சர்வதேச நடுவருக்கான பயணமானது சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகின்றோம்.
V.M.M.ஹஸீன்
நடுவர் (ACUSL)