இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய கிரிக்கெட் சபை தலைவருமான சவ்ரவ் கங்குலியைப் பற்றி மீண்டும் பேச வைத்திருக்கிறார் நியூசிலாந்தின் அறிமுக வீரரான டேவன் கொன்வே.
இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்று ஆரம்பமான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாளிலேயே டேவன் கொன்வே அதிரடியாக சதம் விளாசினார்.
டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி , அறிமுகப் போட்டியில் அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தாயகம் எனப்படும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதமடிப்பதென்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவாகும் .
அந்த கனவை தன் முதல் போட்டியிலேயே சதமடித்ததன் மூலம் கொன்வே நனவாக்கியிருக்கிறார் .
1996 ம் ஆண்டு இந்திய வீரரான சவ்ரவ் கங்குலி , லோர்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமானபோது அறிமுகப்போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.
கங்குலிக்கு பின்னர் இப்போது அறிமுக போட்டியிலேயே லோர்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த சாதனையை கொன்வே படைத்திருப்பதோடு, மீண்டும் சவ்ரவ் கங்குலி பற்றி வர்ணனையாளர்களையும் சமூக வலைத்தளங்களிலும் பேச வைத்திருக்கிறார் எனலாம்.
போட்டியில் தொடர்ந்து 2 வது நாளில் ஆடிய கொன்வே, இரட்டை சதத்தை பூர்த்தி செய்து 200 ஓட்டங்களில் ரன் அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். 9 விக்கெட்டுக்களை நியூசிலாந்து அணி 338 ஓட்டங்களில் இழந்தாலும் நீல் வாக்னர் கைகொடுக்க, டேவன் கொன்வே அற்புத இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
இதே நேரம் 25 ஆண்டுகளாக கங்குலி கட்டிக்காத்த சாதனையையும் டேவன் கொன்வே தகர்த்துள்ளார், 1996 ல் கங்குலி 131 ஓட்டங்கள் பெற்றமையே லோர்ட்ஸ் மைதானத்தில் அறிமுக போட்டியில் ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
இறுதியில் கொன்வே ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 378 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.