சவ்ரவ் கங்குலி எனும் வரலாற்று ஆளுமை ..!

கிரிக்கெட்டின் மீதான காதல் அன்று தொட்டு இன்றுவரை தொடர்கதையாகவே பயணிக்கின்றது, நானும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை ஏராளமான கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கண்டிருக்கின்றேன், ரசித்திருக்கின்றேன்.

ஒரு சாமான்ய கிரிக்கெட் ரசிகனாக மட்டுமல்லாது சவ்ரவ் கங்குலியின் ஆளுமையால் அதிகம் ஈர்கப்பட்டவன் எனும் அடிப்படையிலும், சவ்ரவ கங்குலியின் சாதனைகளைப் பற்றிய ஒரு நீண்ட பதிவுக்காக உங்களை அழைக்கின்றேன்.

என் வாழ்வும் வளமும் விளையாட்டு என்றாகிவிடுவதற்கு முன்னதாக எத்தனையோ முன்னாள் நட்சத்திரங்கள் நம்மை ஆண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் மீதான காதலை ஏற்படுத்தி வென்றிருக்கிறார்கள்.

90 களின் பிற்பகுதி அது.

இந்திய கிரிக்கெட்டின் மீது அளவுகடந்த காதல் கொண்ட காலம் அது.
இப்போதைய இணையவழி செய்தி மூலங்களோ அல்லது, சுடச்சுட ஸ்கோர் தரவென்று வானொலிகளோ இல்லாத காலகட்டம் அது.

இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகின்ற போட்டிகளை கண்டுகளிக்க தொலைக்காட்சியே இல்லாத நாட்கள் அவை,(வீட்டைப் பிரிந்து நகர பாடசாலையில் கல்வி தொடந்த நாட்கள்) சச்சின், அசாருதீன், அஜய் ஜடேஜா ஆகியோர் மீது அப்படியொரு விருப்பம். விளையாட்டின் மீது கொண்ட காதலால் All India Radio வில் சரியாக 2.30 க்கு மதியநேர செய்திகள் ஒலிக்கும். 2 மணிக்கு பாடசாலை முடிந்து விட்டால் 2.30 க்குள் வீட்டுக்கு வந்து வானொலிப் பெட்டியை திருகி SW 1 அலைவரிசையில் ஒலிக்கும் செய்திகளைக் கேட்பேன் , ஹிந்தியில் ஒன்றும் புரியாமலேயே Commentary செவி மடுப்பேன், வர்ணனையாளர் குறிப்பிடும் துடுப்பாட்ட வீரர்களது பெயர்களையும், மைதானத்தின் கரவொலியையும் வைத்துக்கொண்டு ஓரளவுக்கு ஸ்கோர் இப்படித்தான் இருக்கும் என்று மட்டுக்கட்டிக் கொள்வேன்.எப்போதாவது சென்னையில் கிரிக்கெட் நடந்தால் தெரிந்த தமிழில் கிரிக்கெட் வர்ணனை கேட்டு ரசித்து இன்புறுவேன்.

அடிக்கடி வாசிகசாலை செல்லும் பழக்கம் கொண்ட நான், ஆங்கில நாளிதழ்களின் இறுதி பக்கத்தை தேடி அலை மோதுவேன், ‘இந்தியா டுடே’ தேடி தேடித் வசித்து மகிழ்வேன். இணையமே இல்லாத அந்த நாட்களில் அன்றிருந்த விளையாட்டு மீதான காதல் என்பது எனக்கு புதுவித போதை.

இந்திய கிரிக்கெட்டில் அசார், ஜடேஜா ஆகியோர் சூதாட்டத்தில் சிக்குண்டுபோய் இந்திய கிரிக்கெட் திக்கு முக்காடிப் போய் கிடக்கிறது,வீரர்கள் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெறுப்பும் வேதனையும் பற்றிக் கொள்கிறது, இந்த இருண்ட யுகத்திலிருந்து இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுக்க ஒரு மீட்பர் கொல்கொத்தாவிலிருந்து வருகிறார்.

பெயர் கங்குலி.

92 இல் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தாலும் இந்த ‘வணங்கா முடி’ வீரர்களுக்கு ட்ரிங்க்ஸ் கொண்டு கொடுக்க மறுத்து அடம்பிடிக்கிறார் , கிரிக்கெட் விளையாடத்தான் வந்தேனே தவிர நான் ஒன்றும் தண்ணீர் போத்தல்கள் காவுவதற்கு வரவில்லை என்று அடம்பிடிக்கின்றார விளைவு 4 ஆண்டுகள் கிரிக்கெட் கதவு அடைக்கப்படுகின்றது. 96 இல் நவஜோத் சிங் சித்து வுக்கு பதிலாக வரலாற்றுப் பெருமைமிகு இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் அறிமுகத்தை அவருடைய நண்பனான ராகுல் டிராவிட்டோடு இந்த வங்கப்புலி அதுதான் நம்ம ஆல்டைம் பேவரைட் ஹீரோ Prince of kolkotta எனும் நாமம் கொண்டு கிரிக்கெட்டில் நுழைகிறது.

தாதா-Dada என்றால் நாமெல்லாம் நம்மூரில் அடாவடியில் ஈடுபடுபவர்களையே குறித்து நிற்போம், ஆனால் பங்காலிகள் மொழியில் ‘தாதா’ என்றால் நமது பாசையில் சொன்னால் “அண்ணை’ ‘அண்ணே ”அண்ண ‘ அந்தமாதிரியான அண்ணனைக் குறிக்கும் ஒரு வார்த்தை, கங்குலியையும் எல்லோரும் தாதா என்றே அழைக்கிறார்கள் .

அறிமுக டெஸ்ட்டிலேயே சதமடித்து அசத்த, இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு ஆக்ரோஷமான வீரர் வந்து கதவை தட்டுகிறார் எனும் பெருமையும் திருப்தியும் நமக்கெல்லாம் பிறக்கிறது. 131 ஓட்டங்கள் லோர்ட்ஸ் மைதானத்தில் ஒரு அறிமுக வீரரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர், அது இன்றுவரை சாதனையே.

கங்குலியின் ஆளுமை, அணுகுமுறை, அசராத தன்மை ஆகியவற்றால் இந்திய கிரிக்கெட் ஒவ்வொரு செங்கல், செங்கலாக கொண்டு செதுக்கப்பட்டு மேலுழுகிறது, புதிய இள ரத்தம் பாய்சப்படுகிறது, இந்திய கிரிக்கெட் பற்றி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட பார்வை மெல்ல மெல்ல உயர்கிறது, இந்தியா என்றால் அடங்கிப் போகும் அணி என்பதிலிருந்து கிரிக்கெட்டை ஆளும் ஓர் அபாய அணி எனும் பெயர் பெருகுகிறது.

சச்சினை விட்டால் ஒரு துடுப்பாட்ட வீரரும், கும்ப்ளே, ஸ்ரீநாத் ஆகியோரை விட்டால் பந்துவீசவும் யாரும் இல்லை எனும் கதை மாறி, சச்சின் ஆட்டம் இழந்தால் அணியின் கதை முடிந்தது என்பதையெல்லாம் அடியோடு மாற்றியமைத்து இறுதியாய் வரும் சாஹிர் கானும் சிக்ஸர் அடித்து மிரட்டும் வல்லமை கொண்டதாக இந்திய அணியை கட்டி எழுப்புகிறார்.

சச்சினுக்கு சரியான ஆரம்ப ஜோடி இல்லை எனும் குறை நெடுகாலமாய் நீள்கிறது, அந்த குறையை சச்சினுடன் சேர்ந்து ஆரம்ப வீரராக களமிறங்கி தாதா மாற்றிக் காட்டுகிறார், டெஸ்மாண்ட் ஹெயின்ஸ், கோர்டான் கிரீனிட்ஜ் ஆகிய மேற்கிந்திய தீவுகளின் சிறந்த ஆரம்ப ஜோடிக்கு பின்னர் சச்சின்- கங்குலி ஜோடி சாதனைகளை ஒவ்வொன்றாய் புதுப்பிக்கிறது.

ஒரு தலைவன் என்பவன் ஒரு அணியின் பலத்தையும் தாண்டி, பலவீனத்தை நன்கறிந்தவனாக இருக்க வேண்டும், ஒருவனுக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதையும் கடந்து, எதை கொடுக்க கூடாது என்பதை நன்கு புரிந்திருக்க வேண்டும், கங்குலிக்கு இது இரண்டுமே கை வந்த கலை. கங்குலியின் பிரதான வெற்றிகளின் சூட்சுமமே இதுதான். லக்ஸ்மனுக்கு டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத இடம் கொடுத்த தாதா 2003 உலக கிண்ண அணியில் அவருக்கு பதிலாக தினேஷ் மோங்கியாவை சேர்கின்றார்,பின்னரான நாட்களில் கும்ப்ளேக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் ஹர்பஜனை அதிகம் பயன்படுத்தினார்.

இந்திய கிரிக்கெட்டை எல்லோரும் எள்ளி நகையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்தியக் கிரிக்கெட் அணியைக் கண்டு எல்லா அணிகளும் மிரண்டோடும் மனோபலத்தை ஆழமாய் விதைக்கிறார் ,
வரண்டு போய் கிடந்த நிலத்தை உழுது பண்படுத்தி நாற்று நட்டுவிட்ட கங்குலி எனும் இந்திய கிரிக்கெட்டின் பிதாமகனாலேயே டோனியும் , கோஹ்லியும் காய்களையும், கனிகளையும் உண்டு மகிழ்கின்றனர் என்றால் அதுவொன்றும் மிகையில்லை. இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியமைத்த பெருமை கங்குலிக்கே உரியது.

சொந்த மண்ணில் சூரர்களாக அசுரத்தாண்டவம் போடும் இந்திய அணி, அயல்நாட்டு மண்ணுக்கு போனால் மடிந்து போன கதைகள் பலவுண்டு, டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டு மண்ணில் சுற்றுலாப் பயணிகள் போல் சென்றுவந்தவர்களை ஆயுதங்கள் கொண்டு ஆட்கொண்டு வெற்றிகளின்பால் அழைத்து வெளிநாட்டு வெற்றிகளையும் ருசிக்க கற்றுக் கொடுத்தவர்.

மைதானத்தில் இவரது ஆக்ரோஷமும், அதிரடியும், அணியை வழிநடாத்தும் பாங்கும் எதிரணிகளின் வயிற்றில் புளியை வார்த்த சம்பவங்கள் பலது இருக்கின்றன.

இந்திய கிரிக்கெட்டின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளராக திகழ்ந்த ஜான் ரைட்டின் பயிற்றுவித்து காலத்தில் ஜான் ரைட் மற்றும் கங்குலி செய்த இமாலய சாதனைகள் ஏராளம் பட்டியல்படுத்தலாம்.

2011 இல் உலக கிண்ணம் வென்ற தோனியும், அப்போது பயிற்சியாளராக திகழ்ந்த ஹரி கேர்ஸ்ட்னையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுமளவுக்கு 2011 உலக கிண்ணத்துக்கான சிறந்த அணியை உருவாக்குவதில் அயராது உழைத்து, உரமிட்டுகொடுத்த இந்த ஜான் ரைடை எல்லோரும் மறந்து விடுகிறார்கள்.

என்னை பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் இதுவரைக்கும் கண்டிராத ஒரு மிகசிறந்த பயிற்சியாளர் என்றால் அது ஜான் ரைட் தான், அவரது காலத்தில் கங்குலி அணிக்கு எத்தனையோ புதிய ரத்தங்களை கொண்டு சேர்த்தார்.

2011 இல் இந்திய உலக கிண்ணம் வென்ற அணியை உருவாக்கியவரும் இந்த கங்குலிதான்.
டோனி, சேவாக், காம்பிர், யுவராஜ், ஹர்பஜன், சாஹிர் கான், நேஹ்ரா, போன்ற பலரை உருவாக்கியவர், அதுமாத்திரமல்லாமல், மொஹம்மட் கைப், இர்பான் பதான், பாலாஜி, தினேஷ் கார்த்திக் என்று ஏராளமான இளசுகளை இந்திய கிரிக்கெட்டுக்குள் புகுத்தி அழகு பார்த்தவர்.

கிரிக்கெட் என்றால் அவுஸ்திரேலியாதான் என்றிருந்த நிலைமையில் அவர்களுக்கு அவர்களது மண்ணில் வைத்து தண்ணி காட்டி விட்டுவந்த அணிக்கு தலைமை தாங்கியவர் கங்குலி, 2001 ம் ஆண்டு தொடர்ச்சியான 16 டெஸ்ட் வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து இந்திய மண்ணில் நெஞ்சுநிமிர்த்தி குதித்த ஆசியை அலரவிட்டவர், முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வென்று 2-1 என்று டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டு அவுஸ்திரேலியாவுக்கே மரண பயத்தைக் காட்டி, தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டி கிரிக்கெட்டை ஆளும் ராஜாக்கள் இனிமேல் நாங்கள்தான் என்பதை உரக்க உச்சரித்துக் காட்டியவர்.

இந்த வெற்றிக்கு பின்னர் 2003 அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 2 போட்டிகளை DRAW, ஒரு போட்டி வெற்றி, ஒரு போட்டி தோல்வி என்று 2003 இல் அவர்கள் மண்ணில் வைத்தே அதே பயத்தை உருவாக்கி விட்டு டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்து போர்டார்-கவாஸ்கர் கிண்ணத்தை அவுஸ்திரேலியர்களுக்கு முன்பாகவே எதையும் எதையும் நாம் எதிர்க்க தேவை தில் என்று தில்லாக ஏந்திக் காட்டியவர்.

2001 ம் ஆண்டு அவுஸ்திரேலியா அணி இந்திய சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் ஹர்பஜன் தான் அணிக்கு வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று சாதித்தவர் .அந்த தொடரில் 3 போட்டிகளில் ஹர்பஜன் ஹாட் ட்ரிக் சாதனை அடங்கலாக 32 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றி தன் தலைவன் முடிவில் தவறில்லை என்பதை பறைசாற்றினார். சுனில் ஜோஷி, முரளி கார்த்திக், ஹர்விந்தர் சிங் என்று தேர்வுக்குழு பெயர் குறித்துக் காத்திருக்க ஹர்பஜனை அணிக்குள் கொண்டுவந்து ஆசியை மிரள செய்தவர்.

2003 ம் ஆண்டு உலக கிணத்துக்கான அணியில் லக்ஸ்மனுக்கு பதிலாக தினேஷ் மோங்கியாவை தேர்வு செய்தவர்.1983 க்கு பின்னர் 20 ஆண்டுகளாக உலக கிண்ண கனவோடு இருந்த இந்தியர்களை இறுதி போட்டி வரைக்கும் அழைத்து சென்றவர், மோங்கியா என்ற ஒன்றுக்கும் உதவாத விக்கெட் காப்பாளர் அணியில் இடம்பிடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கில்கிறிஸ்ட் போன்ற ஒரு விக்கெட் காப்பாளர் கிடைக்க மாட்டாரா என்று இந்தியர்கள் தவம் கிடக்க, ராஞ்சியிலிருந்து டோனியை களமிறக்கி காட்டியவர், இன்று டோனியைப் போல் ஒருவர் அணிக்கு வேண்டும் என்று அவுஸ்திரேலியாவே குறிப்பிடுகின்ற அளவுக்கு அணிக்கட்டமைப்பை மாற்றிக் காட்டியவர். அணியின் சமநிலையைப் பேணுவதற்காகவும் மொஹமட் கைப்பை அணியில் சேர்க்கவும் வேண்டி டிராவிட்டை முழுநேர விக்கெட் காப்பளாராக்கி வெற்றி கண்டவர் தாதா.

2004 இல் தேர்வுக் குழுவோ தினேஷ் கார்திக்கையும், பார்த்தி பட்டேலையும் விக்கெட் காப்பாளராக முன்மொழிய டோணிதான் எனக்கு வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று ஒரு உலக கிண்ண நாயகனையே உருவாக்கி வெற்றிகண்டவர். 2003 ம் ஆண்டு உலக கிரிக்கெடடை அவுஸ்திரேலிய மிரட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவுஸ்ரெரேலியவையே மிரட்ட இர்பான் பதான் அணிக்கு தேவை என்பதை உணர்ந்து டெஸ்ட்டில் அறிமுகம் கொடுத்து மிரட்டியவர்.

மத்திய வரிசையில் சேவாக் சொதப்ப , தனது ஆரம்ப வீரர் எனும் ஸ்தானத்தையே அணியின் நலன்சார்ந்து விட்டுக் கொடுத்து, சேவாக் போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த ஆரம்ப வீரர் உருவாக வழிசமைத்தவர், அணியின் நலனுக்காக தனது இடத்தையே விட்டுக் கொடுக்க துணிந்த ஒரு தானைத்தலைவன் தான் என்பதை காட்டியவர்,

சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தால் இந்தியாவின் நிலைமை அதோகதிதான் என்றிருக்க 2002 நாட்வெஸ்ட் தொடர் மூலமாக இந்தியாவின் துடுப்பாட்ட பலம் எதுவென்பதை உலக அரங்கில் எடுத்துக் காட்டியதோடு மட்டுமல்லாமல் வெறுமனே தோல்வியை மட்டுமே தவிர்ப்பதற்காக போராடிக் கொண்டிருந்த இந்திய டெஸ்ட் அணியை வெளிநாட்டிலும் வெற்றிகளைக் குவிப்பது எப்படி எனும் வித்தையை கற்றுக் கொடுத்தவர்.

ஒரு தலைவனாக கங்குலி சாதித்ததற்கு சமமாக கங்குலி தனது துடுப்பாட்ட பலத்தாலும் எதிரணியை மிரள வைத்தவர் எனலாம், சர்வதேச ஒரு நாள் கிரிகெட் வரலாற்றில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் சவ்ரவ் கங்குலி மட்டும் தான்.

ஒரு நாள் போட்டிகளீல் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்களில் 2வது இடத்தில் சவ்ரவ் கங்குலி இருக்கின்றார் , சர்வதேச அலவில் ஒரு நாள் கிரிகெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளதோடு சர்வதேச கிரிகெட் வரலாற்றில் 100 டெஸ்ட் போட்டிகள், மற்றும் 300 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் விளையாடிய 14 வீரர்களில் ஒருவர்.

அந்நிய மண்ணில் அதிக டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய தலைவர் சவ்ரவ் கங்குலி. அந்நிய மண்ணில் இவர் தலைமையில் 28 போட்டிகளில் ஆடிய இந்திய அணி 11 போட்டிகளில் வென்றுள்ளது. கங்குலி அடித்த 16 டெஸ்ட் சதங்களில் எதிலுமே இந்திய அணி தோற்கவில்லை என்பதும் சிறப்பே ,ஒருநாள் போட்டிகளில் அடித்த 22 சதங்களில் 18 வெளிநாட்டு மண்ணில் விளாசப்பட்டவை.

2000 முதல் 2006 வரை 49 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைவராக இருந்த செளரவ் கங்குலி, அதில் 21 போட்டிகளில் வென்றுள்ளார் இதிலே 11 டெஸ்ட் வெற்றிகள் வெளிநாட்டு மண்ணில் பெறப்பட்டவை. 13 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. அதேபோல் செளரவ் கங்குலி தலைவராக இருந்த 146 ஒருநாள் போட்டிகளில், 76 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.இதிலே 58 இந்தியாவுக்கு வெளியில் பெறப்பட்ட வெற்றிகள்.

இந்திய அணியை பொறுப்பெடுக்கின்ற போது டெஸ்ட் தரநிலையில் 8 வது இடத்தில இருந்த இந்தியா, கங்குலி விடைபெறுகின்ற போது 2 வது இடத்துக்கு முன்னேறியிருந்தது என்றால் எப்படி அணியைக் கடடமைத்திருப்பார் என்று சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை.

ஆப் சைடில் இவர் அடிக்கும் ஷாட்ஸ் எல்லாம் வேறுவித போதையை கொடுக்க வல்லன, சுழல் பந்து வீச்சாளர்கள் பந்தை அனுப்புகின்ற அதே நொடியிலேயே கணித்து புலி பதுங்கிப் பாய்வதை போல் கொஞ்சம் முன்னகர்ந்து வந்தால் அந்தப் பந்தை மைதானத்துக்கு வெளியில்தான் காணக்கிடைக்கும்.

கிரேக் சாப்பெல் எனும் இந்திய கிரிக்கெட்டை அழிக்க வந்த விசமியை இந்தியாவுக்கு பயிற்றுவிக்க கங்குலி மட்டும் அடையாளம் காட்டாமல் இருந்திருந்தால், கங்குலியும், இந்திய அணியும் இன்னும் எவ்வளவோ சாதனைகளில் மிதந்திருக்கலாம், ஆனால் சாப்பெல் கங்குலியை மட்டுமல்ல இந்தியக் கிரிக்கெட்டையும் சுக்குநூறாக்க முயன்று பார்த்தார். அது ஒரு இருண்ட யுகம்.

ஒவ்வொரு இடத்திலும் இந்த மாதிரி ஒரு கருப்பு ஆடு அணியைக் கரை சேர்க்க என்று குதித்து ஒட்டுமொத்த கட்டமைப்பையே சீர்குலைக்கும், நிர்வாகமும் அதன் பேச்சில் ஆடும் , இப்படித்தான் சாப்பெல் கதையை கேட்டு இந்திய அணி தலைமைத்துவத்தில் மட்டுமல்ல அணியிலிருந்தும் இந்திய கிரிக்கெட்டின் God father கங்குலி தூக்கப்படுகிறார்.

கங்குலியின் ஆதரவு இந்தியாவில் என்னவென்பதை புரிந்திராத BCCI, கொல்கொத்தாவில் இந்திய, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் கொல்கொத்தா ரசிகர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த ஆதரவு கண்டு மிரண்டு போகின்றது. அந்தளவுதூரம் கங்குலியை கடுவுளாக கொண்டாடுபவர்கள் இந்தியர்கள். இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால் அங்கே கங்குலி போன்றவர்கள்தான் கடவுள்.

எந்த இடத்தில நீ மதிக்கப்படாமல் விரட்டப்படுகிறாயோ அந்த இடத்தை ஒருநாள் நீ ஆள வேண்டும், BCCI சாப்பெல் கதையைக் கேட்டு கங்குலியை அவமதித்ததோ அதே BCCI யை இன்று கங்குலிதான் ஆளுகிறார், கங்குலியின் எழுச்சியும் வளர்ச்சியும் அப்படியானது.

இந்திய கிரிக்கெட்டின் அற்புதமான வீரராக, தலைவராக இருந்து இந்திய கிரிக்கெட் சபையை ஆண்டு கொண்டிருக்கும் கங்குலி, வெகுவிரைவில் சர்வதேச கிரிக்கெட்டை வழிநடத்துவார் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

டோணியைப் பற்றிய படம் டோனியின் கிரிக்கெட் வாழ்வை நமக்கு புடம்போட்டு காட்டியது, சச்சினைப் பற்றிய படமெடுத்தால் சச்சின் கிரிக்கெட் சாதனைகளையும் , வாழ்வையும் நிச்சயமாய் நமக்கு காட்டத்தான் போகிறது, ஆனால் கங்குலியைப் பற்றி படமெடுத்தால் நிச்சயம் அது கங்குலியைப் பற்றி பேசுவதை விடுத்து இந்திய கிரிக்கெட்டை பேசும், ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டை செங்கற்கள் கொண்டு செதுக்கி நிறுத்தியவர் கங்குலி.அதன் வளர்ச்சிப் படிகள் ஒவ்வொன்றிலும் கங்குலியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக வலம்வந்து இன்றைய சர்வதேச கிரிக்கெட் சபையையும் ஆளக் காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட என் ரோல் மொடல் வங்கப்புலி சவ்ரவ் கங்குலி க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆப் சைடில் பறக்கும் பந்துகள்,
கூரைக்கு மேல் தெறித்த சிக்ஸர்கள்,
லோர்ட்ஸ்ட்டில் சட்டையை கழற்றி பிலிண்டோப் க்கு பாடமெடுத்த நிகழ்வுகள்.
ஸிடீவ் வோவையே நாணய சுழற்சிக்கு காக்க வைத்தமை என்று ஏராளம் கங்குலியை நமக்கு நினைவு படுத்தினாலும் ஒரு வீரன்,தலைவன்,வழிகாட்டி,வர்ணனையாளர்,
நிர்வாகி என பன்முகத் திறமைகளின் ஆளுமை வெகு விரைவில் சர்வதேச கிரிக்கெட் சபையின் உயரிய பதவியில் உட்காரத்தான் போகிறது, அதனையும் நாமெல்லாம் கொண்டாடித்தான் பார்க்க போகிறோம், கிரிக்கெட்டே தெரியாமல் கிரிக்கெடடை ஆள பலர் முற்படும் இக்காலத்தில் கிரிக்கெட்டை ஆண்ட ஒருவர் கிரிக்கெட் சபையை ஆளும் காலத்திற்க்காய் காத்திருப்போம்.

#HappyBirthdayDada

தில்லையம்பலம் தரணிதரன்

2020.07.08 (எழுதியது)