சாமிக்கவுக்கு ஓராண்டு போட்டித் தடை – SLC அறிவிப்பு…!

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை ஆட்டக்காரர் சாமிக்க கருணாரத்னவுக்கு ஓராண்டு போட்டி தடை விதிப்பதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்திருக்கிறது.

ட்வெண்டி ட்வெண்டி உலகக்கிண்ண போட்டிகள் இடம்பெற்றபோது சூதாட்ட விடுதி ஒன்றில் முறைகேடாக நடந்து கொண்டதாக முன்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்து மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானத்திற்கு வந்திருக்கிறார்கள்.

ஓராண்டு போட்டி தடையும் 5000 அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவித்திருக்கின்றது.

சாமிக்க கருணாரத்னவின் தடையானது பானுக ராஜபக்சவின் 2021 தடையைப் போன்றது: அவர் மீண்டும் வீரர் குறியீட்டை மீறினால் மட்டுமே 1 வருட தடை நடைமுறைக்கு வரும், அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் விளையாட முடியும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதேபோன்றதொரு தடை பானுக ராஜபக்சவுக்கு இருந்தபோது அவர் தேசிய அணியில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் சாமிக்க கருணாரத்ன இடம்பெறாமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவிடம் எழுத்துமூலம் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரில் சாமிக்க கருணாரத்ன இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்காக அல்ல என இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மோகன் டி சில்வா அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த நிலையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சரின் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇